/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போனில் போலீஸ் போல பேசியதால் கொலையில் முடிந்த 'பிராங்க்' அழைப்பு
/
போனில் போலீஸ் போல பேசியதால் கொலையில் முடிந்த 'பிராங்க்' அழைப்பு
போனில் போலீஸ் போல பேசியதால் கொலையில் முடிந்த 'பிராங்க்' அழைப்பு
போனில் போலீஸ் போல பேசியதால் கொலையில் முடிந்த 'பிராங்க்' அழைப்பு
ADDED : ஜூலை 11, 2025 09:36 PM

மதுரை : மதுரையில், பள்ளி நண்பரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் போலீஸ் போல பேசி, மிரட்டல் விடுத்து, 'பிராங்க்' எனும் குறும்பு செய்தது கொலையில் முடிந்தது.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அரசு, 18, பெயின்டர். அதே பகுதியைச் சேர்ந்த இவரது பள்ளி நண்பர் அழகுபாண்டி.
சில நாட்களுக்கு முன் அரசுவை போனில் தொடர்பு கொண்ட அழகுபாண்டி, பின்னணியில் போலீசாரின் வாக்கி டாக்கி சத்தத்தை ஒலிக்க செய்து, போலீஸ் போல பேசியுள்ளார். பயந்து போன அரசு, தன் தாயிடம் போனை கொடுக்க, 'உங்க பையன ஒழுங்கா இருக்க சொல்லுங்க. உங்க பையன் ரொம்ப சேட்டை பண்றான். கவனமா இருக்க சொல்லுங்க' என மிரட்டியுள்ளார்.
அரசும், அவரது குடும்பத்தினரும் பயத்தில் இருந்தனர். சில நாட்களுக்கு பின், போலீஸ் போல பேசியது அழகுபாண்டி தான் என அரசுக்கு தெரிய வந்தது. 'ஜாலி'க்காக செய்ததாக கூறிய அழகுபாண்டியிடம், அரசு பேசிக்கொள்ளவில்லை.
நேற்று முன்தினம், அழகுபாண்டியின் அண்ணன் செல்லப்பாண்டி, 28, என்பவரை, அரசு முறைத்து பார்த்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற செல்லப்பாண்டி, அரசின் வீட்டிற்கு கோபத்துடன் சென்றார்.
அரசின் தாய் கதவை திறந்தபோது, உள்ளே புகுந்த செல்லப்பாண்டி, கத்தியால் அரசுவின் கழுத்தில் குத்தினார்.
அரசுவின் தாயும், தங்கையும் தடுத்த போது அவர்களையும் தாக்க முயன்றார்.
தடுத்த அரசுவை, மீண்டும் கத்தியால் குத்திவிட்டு, செல்லப்பாண்டி தப்பினார்.
அவரை விரட்டிச்சென்ற அரசு, மயங்கி விழுந்து இறந்தார்.
சிலைமான் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை நேற்று மதியம் கைது செய்தனர். இவர் மீது, திண்டுக்கல் மாவட்டம் கீரனுார் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கு உள்ளது.

