/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாறை இடுக்கில் சிக்கிய பேராசிரியை
/
பாறை இடுக்கில் சிக்கிய பேராசிரியை
ADDED : டிச 28, 2025 06:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மெரினா பீச்சில், 'ரீல்ஸ்' எடுத்தபோது பாறையில் சிக்கிய பெண் பேராசிரியரை நீண்ட போராட்டத்திற்கு பிறகு காயங்களுடன் மீட்கப் பட்டார்.
மதுரையை சேர்ந்தவர் வைஷ்ணவி, 26; சென்னையில் உளவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த அவர், மலை 5:30 மணி யளவில், பாண்டி மெரினா பீச்சில் பாறைகளுக்கு இடையே நின்று 'ரீல்ஸ்' எடுத்துள்ளார். அப்போது, ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு தாவியபோது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த போலீசார் மற்றும் சுற்றுலா பயணிகள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் கால் மீது பாறை விழுந்திருந்ததால், மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பாறை பெரிய அளவில் இருந்ததால், அவர்களாலும் மீட்க முடியவில்லை.
கிரேன் கொண்டு வந்து பாறையை நீக்கி, வைஷ்ணவியை மீட்க முடிவு செய்து, கிரேனை வரவழைத்தனர். கிரேன் இரவு 7:50 மணிக்கு வந்தது. ஆனால், கிரேன் பாறைகளில் செல்ல சிரமம் ஏற்பட்டது. உடன் உள்ளூர் இளைஞர்கள், பாறைகளை அகற்றி வழி ஏற்பாடு செய்தனர். அதையடுத்து, இரவு 8:00 மணியளவில், கிரேன் மூலம் பாறையை நகர்த்தி, இடிபாட்டில் சிக்கிய பேராசிரியை வைஷ்ணவியை மீட்டனர்.
பாறை இடுக்கில் சிக்கியதால் பேராசிரியையின் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரை, போலீசார் ஸ்டெரச்சர் மூலம் துாக்கிச் சென்று, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடையை மீறுவதால் தொடரும் விபத்து
புதுச்சேரி மெரினா எதிரே உள்ள கடற்பகுதி பாதுகாப்பு இல்லாத பகுதி என்பதற்காக கூடுதலாக பாறைகள் போடப்பட்டுள்ளது. அதன் மீது நிற்க வேண்டாம்.. செல்பி எடுக்க வேண்டாம் என போலீஸ் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் பலர் அங்கு சென்று செல்பி -ரீல்ஸ் எடுப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

