UPDATED : நவ 26, 2026 06:31 PM
ADDED : நவ 26, 2026 06:31 PM
பாலமேடு: ‘‘சத்திர வெள்ளாளபட்டியில் பராமரிப்பின்றி பாழடைந்த மயானத்தை சீரமைக்க வேண்டும்’’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு வலையபட்டி செல்லும் வழியில் கிராம சேவை மைய கட்டடம் அருகே மயானம் அமைந்துள்ளது. இந்த வளாகம் முழுதும் பாதையே தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் அடர்ந்து காடாக காட்சியளிக்கிறது. காத்திருப்போர் கூடத்தை செடி, கொடிகள் சூழ்ந்திருப்பதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. பகலிலேயே ஆபத்தான நிலையில் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. இரவில் போதுமான தெருவிளக்குகள் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகிகிறது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
