/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிக்கல் உண்டாக்கும் சில்லரை விவகாரம்
/
சிக்கல் உண்டாக்கும் சில்லரை விவகாரம்
ADDED : அக் 07, 2024 05:30 AM
பேரையூர்: சில்லரைத் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், பேக்கரிகளில் சில்லரைக்கு பதில், சாக்லேட் கொடுப்பதால் கடைக்காரர், வாடிக்கையாளரிடையே மோதல் ஏற்படுகிறது.
பஸ்களில் பயணிக்கும்போது மட்டுமே நிலவிய சில்லரைத் தட்டுப்பாடு, தற்போது பெட்டிக்கடைகள் முதல், டிபார்ட்மென்டல் ஸ்டோர் வரை விரிவடைந்து உள்ளது. பெரும்பாலான ஓட்டல்கள், மளிகை கடை, பெட்டிக்கடைகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர். அலைபேசியில், கியூ.ஆர்., கோடு, டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு பிரச்னையில்லை. சாமானிய மக்கள் பலர் பணத்தை ரொக்கமாக வழங்கும்போது இப்பிரச்னை ஏற்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு மீதி சில்லரை வழங்குவதற்குப் பதிலாக சாக்லெட், மிட்டாய் வழங்கப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், சில்லரை தருவது இல்லை. தற்போது கடைக்காரர்கள் 100 ரூபாய்க்கு, ஐந்து வீதம் கமிஷன் கொடுத்து சில்லரை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். அரசு அலுவலர்கள் முதல் பாமர மக்கள் வரை பெரும்பாலானோர் டிக்கெட்டுக்கான சரியான சில்லரை இன்றி பஸ்களில் ஏறி விடுகின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகிறது. எனவே, வங்கிகள், சில்லரை மேளாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

