/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆவின் பி.எம்.சி.,களில் பால் தரம் நிர்ணயம் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
/
ஆவின் பி.எம்.சி.,களில் பால் தரம் நிர்ணயம் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ஆவின் பி.எம்.சி.,களில் பால் தரம் நிர்ணயம் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ஆவின் பி.எம்.சி.,களில் பால் தரம் நிர்ணயம் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 20, 2025 07:27 AM
மதுரை : தமிழகத்தில் வட மாவட்டங்களில் உள்ளது போல் ஆவின் மொத்த பால் குளிரூட்டும் மையங்களிலேயே (பி.எம்.சி.,) பால் அளவு, தரம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநில அளவில் 27 ஆவின் ஒன்றியங்கள் செயல்படுகின்றன. தவிர சென்னையில் நந்தனம், மாதவரம், சோழிங்கநல்லுாரில் பெடரேஷன் அலுவலகங்கள் உள்ளன. மாநில அளவில் பால் உற்பத்தியாளர்களிடம் தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதலும், 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விற்பனையும் நடக்கிறது.
ஒரு லிட்டர் பாலில் 4.3 சதவீதம் கொழுப்பு சத்து, 8.2 சதவீதம் இதர சத்துகள் இருந்தால் அதற்கு ரூ.35, ஊக்கத் தொகையாக ரூ.3 என உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் 90 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ.38 பெற முடியவில்லை. இதற்கு காரணம் பாலின் அளவு, கொழுப்புச்சத்து குறைவு போன்ற காரணங்கள் என்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மதுரை மாவட்ட செயலாளர் உக்கிரபாண்டி கூறியதாவது:
மாநில அளவில் 400க்கும் மேற்பட்ட பி.எம்.சி.,கள் உள்ளன. வட மாவட்டங்களில் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு அந்தந்த பி.எம்.சி.,களிலேயே (ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்ட்) தரம், அளவு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் அதுபோல் இல்லை. மாறாக, உற்பத்தியாளர்கள் வழங்கிய பால் பி.எம்.சி.,களில் இருந்து ஒன்றியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒன்றியங்களில் அளவு தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அங்கு பெரும்பாலும் பால் அளவு, இதர சத்துகள் குறைவாக நிர்ணயிக்கப்படுவதால் லிட்டருக்கு ரூ.2 வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே 'ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்ட்' முறையை ஒன்றியங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.