/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெப்பக்குளத்திற்கு தேவை கூடுதல் படகுகள்
/
தெப்பக்குளத்திற்கு தேவை கூடுதல் படகுகள்
ADDED : அக் 24, 2024 05:32 AM

மதுரை: வண்டியூர் தெப்பக்குளம் படகு குழாமை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைத்து கூடுதல் படகுகளை இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சதுர வடிவில் உருவாக்கப்பட்ட இத்தெப்பக்குளம் 16 ஏக்கர் பரப்பளவுடையது. வைகையாற்றில் இருந்து நீர்வரத்து கிடைக்கிறது. குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபத்திற்கு செல்ல படிக்கட்டுகள் இருந்தாலும் பயணிகளுக்கு அனுமதியில்லை.
இக்குளத்தில் ஹிந்து அறநிலையத்துறை் சார்பில் தற்போது ஒரு படகு மட்டுமே இயக்கப்படுகிறது. குளத்தின் நான்கு பக்கத்திலும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப்பாதுகாப்புத்துறையில் பதிவுச் சான்றிதழ் பெற்றவர்கள் உணவு கடைகளை நடத்துகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுற்றுலா வரும் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் தற்போது தெப்பக்குளத்தையும் பார்க்க விரும்பி வருகின்றனர். சில நேரங்களில் படகு சவாரி இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடத்தப்படுகிறது. தெப்பக்குளத்தில் படகு சவாரியை ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்வதால் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கடந்தாண்டு படகு சவாரி நிறுத்தப்பட்டு மீண்டும் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டு படகுகளுக்கு பதிலாக தற்போது ஒரு படகுதான் இயக்கப்படுகிறது.
தெப்பக்குளத்தின் நான்கு முனைகளையும் படகு கடந்து வரும் வரை பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்குள்ள பார்க்கிங், கழிப்பறை வசதியும் போதுமான பராமரிப்பின்றி உள்ளது. கூடுதல் படகுகளை இயக்குவதுடன் தெப்பக்குளத்தின் நான்கு முனைகளில் இருந்து லேசர் லைட்களை மைய மண்டபத்தின் மீது விழும் படி செய்தால் பார்வையாளர்களை கவரலாம்.
உணவு கடைகளை ஒழுங்குபடுத்தினால் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி மதுரை வாசிகளுக்கும் நிரந்தர பொழுதுபோக்கு இடமாக மாறும். ஹிந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை செயலராக உள்ள சந்திரமோகன் சுற்றுலா வளர்ச்சி கழகத்தலைவராகவும் இருப்பதால் தெப்பக்குளம் படகுசவாரியை மட்டும் சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைத்து வருவாயைப் பெருக்க வேண்டும்.