/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்
/
கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்
கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்
கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்
ADDED : நவ 26, 2024 05:27 AM

மதுரை: கிருதுமால் நதியை சுத்தப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நீர்வளத்துறை சார்பில் ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மதுரை நாகமலை அருகே உற்பத்தியாகி மாநகராட்சி பகுதியில் 12 கி.மீ., துாரம் பயணிக்கிறது கிருதுமால் நதி. நாகமலையில் இருந்து அச்சம்பத்து, விராட்டிப்பத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், திடீர் நகர், மேலவாசல், கீரைத்துறை, சிந்தாமணி, சாமநத்தம் வழியாக விருதுநகர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் என 90 கி.மீ., துாரம் பயணித்து குண்டாறுடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வரை செல்கிறது.
மதுரை மாநகராட்சி பகுதியில் மகபூப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, மேலவாசல் உள்ளிட்ட சில இடங்களில் கிருதுமால் வாய்க்கால் பாதை மூடப்பட்டுள்ளது.
இந்நதியை துார்வாரி வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக, வைகைநதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன், நீர்வளத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம் தகவல்கள் கேட்டிருந்தார்.
அவர் கூறியதாவது: குண்டாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் நிறைமதி ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில் 2024 - 25 க்கான நிதியாண்டில் கிருதுமால் நதியை துார்வாரவும், தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டவும் ரூ.7.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்தத் தொகையில் மதுரை மாடக்குளம் கண்மாய் வடிகாலில் இருந்து சிந்தாமணி வரை வெள்ளநீரை திசை திருப்ப கிருதுமால் நதி மேம்படுத்தப்படும்.
நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் தாசில்தார்கள் ஆக்கிரமிப்புகளை மறுமதிப்பீடு செய்து வழங்குமாறு கேட்டுள்ளோம். இதற்கான படிவம் 1 அளித்த பின், படிவம் 2, 3 வழங்கப்பட்டு மாநகராட்சி உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் கிருதுமால் நதி விரைவில் சுத்தம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

