ADDED : பிப் 21, 2025 05:48 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மா மரங்களில் மகசூல் அதிகரிக்க அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா தலைமை வகித்தார். வேளாண் கல்லுாரி தொழில்நுட்ப குழுவினர் ஆனந்தன், இயேசுராஜா, நளினி முன்னிலை வகித்தனர்.
மா மரங்களுக்கு சரியான நீர் நிர்வாகம், உரமிடுதல், சரியான பூச்சி நோய் கட்டுப்பாடு, முறையான பராமரிப்பு இருந்தால் அதிக மகசூலை விவசாயிகள் பெற முடியும் என விளக்கினர். மா மரம் பூக்கும் காலத்தில் முதல் தெளிப்பாக காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது காப்பர் சல்பேட்டு அல்லது பைட்டோலான் மருந்தினை ஒரு லிட்டருக்கு 25 கிராம் கலந்து 18 முதல் 21 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கலாம்.
இத்துடன் காய்ப்புத் திறனை அதிகரிக்க பிளோனாபிக்ஸ் ஒரு மி.லி., அல்லது நாப்தலீன் அசிடிக் அமிலம் என்ற ஊக்கியை ஒரு லிட்டர் நீரில் 20 மி.கி., கரைத்து தெளிக்கலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த இமிடா குளோபிரிட் மருந்தை ஒரு லிட்டருக்கு அரை மில்லி அல்லது ரோக்கர் மருந்தை 1 லி., 3 மி.லி., கலந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் பேசிலஸ் சப்டிலிஸ் மருந்தை 3 முதல் 5 கிராம் மற்றும் பிளேனோபிக்ஸ் ஒரு மி.லி., ஆக இரண்டையும் ஒரு லிட்டர் நீரில் ஒட்டுத் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம். கரும்பூஞ்சான நோயை கட்டுப்படுத்த மைதா அரை கிலோ மாவை 100 லி., நீரில் கலந்து தெளிப்பது மூலமும் கட்டுப்படுத்தலாம் என உதவி இயக்குனர் தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.

