/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையிலும் ஆக., 1 முதல் அமைகிறது அறிவுரை குழுமம்
/
மதுரையிலும் ஆக., 1 முதல் அமைகிறது அறிவுரை குழுமம்
ADDED : மே 24, 2025 07:43 PM
மதுரை:சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் இயங்கும் அறிவுரை குழுமத்தின் கிளை, ஆக., 1 முதல் மதுரையிலும் இயங்குகிறது.
குண்டர் தடுப்பு காவல் சட்டம், சைபர் கிரைம், போதைப்பொருள், சட்டவிரோத பொருட்கள் கடத்தல், மணல் திருட்டு, பாலியல் போன்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்கள், தங்கள் மீதான போலீஸ் நடவடிக்கைகளை ரத்து செய்யவும், பரிசீலிக்கவும், சென்னையில் உள்ள அறிவுரை குழுமத்தை அணுகுகின்றனர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழு பரிசீலித்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இதற்கான விசாரணைக்கு குற்றவாளிகள் சென்னை செல்ல வேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதோடு, அலைச்சல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, 'மதுரையை மையமாக கொண்டு அறிவுரை குழுமத்தின் கிளையை துவக்க வேண்டும்' என, நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதன் எதிரொலியாக, 'ஆக., 1 முதல் மதுரையில் அறிவுரை குழுமத்தின் கிளை செயல்படும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழுமத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கமாலுதீன் நசீருல்லா பாஷா, உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், திருச்சி, தென்காசி, அரியலுார், கோவை, நாகப்பட்டினம், பெரம்பலுார், திருப்பூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களின் மனுக்களை இக்குழுமம் விசாரிக்கும்.