/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கால்வாய்களில் ஆக்கிரமிப்பால் விவசாயம் அழியும்' * குன்றத்து விவசாயிகள் குமுறல்
/
'கால்வாய்களில் ஆக்கிரமிப்பால் விவசாயம் அழியும்' * குன்றத்து விவசாயிகள் குமுறல்
'கால்வாய்களில் ஆக்கிரமிப்பால் விவசாயம் அழியும்' * குன்றத்து விவசாயிகள் குமுறல்
'கால்வாய்களில் ஆக்கிரமிப்பால் விவசாயம் அழியும்' * குன்றத்து விவசாயிகள் குமுறல்
ADDED : அக் 09, 2024 04:09 AM
திருப்பரங்குன்றம் : நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் சாகுபடி நிலங்கள் அழியும்' என, திருப்பரங்குன்றம் தாலுகாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது.
இதில் விவசாயிகள் சாமிநாதன், மாரிச்சாமி, லட்சுமணன், சிவராமன், பாண்டி, கிழவன்சாமி, முத்துமணி பேசியதாவது:
மாடக்குளம் மறுகால் தண்ணீர் வெளியேறும் கால்வாய்க்குள் பாதாள சாக்கடை கழிவுநீர் விடப்படுகிறது. நிலையூர் கால்வாயில் விளாச்சேரி முதல் ஹார்விபட்டிவரை குப்பை, கழிவுகளை கொட்டுவதால் விவசாயம் பாதிக்கிறது.
தார்சாலை பணிக்காக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரை மண்ணை வெளியே கொண்டு சென்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மணல் அள்ளிச்சென்ற லாரிகளை பிடித்து ஒப்படைத்தும் நடவடிக்கை இல்லை.
தார் சாலை அமைக்க கண்மாயின் 2 மடைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. தாசில்தார் ஆய்வு செய்து, மடையை விரைவில் சீரமைக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டு மாதங்கள் பல கடந்தும் சீரமைக்கவில்லை.
கண்மாய்க்கு செல்லும் அனைத்து நீர்வழிப் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வரத்து கால்வாய்கள் அடைபடுவது, ஆக்கிரமிக்கப்படுவது தொடர்ந்தால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தடைபடும். விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகும் என்றனர்.
தாசில்தார்: தென்கால் கண்மாய் கரையில் மணல் எடுத்துச் சென்ற லாரிக்கு அபராதம் விதித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகள்: வசதியுள்ளோர் திருடினால் அபராதம் விதிக்கின்றனர். விவசாயிகள், பொம்மை தொழிலாளர்கள் மண் எடுத்துச் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரி நீதி வேண்டும் என்றனர்.
நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி: வரத்து கால்வாய்களில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளம், வருவாய், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் இணைந்து குழு அமைத்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

