/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவை மதுக்கரை ரயில்வே டிராக்கில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5260 யானைகள் தண்டவாளத்தில் வந்தது கண்டுபிடிப்பு
/
கோவை மதுக்கரை ரயில்வே டிராக்கில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5260 யானைகள் தண்டவாளத்தில் வந்தது கண்டுபிடிப்பு
கோவை மதுக்கரை ரயில்வே டிராக்கில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5260 யானைகள் தண்டவாளத்தில் வந்தது கண்டுபிடிப்பு
கோவை மதுக்கரை ரயில்வே டிராக்கில் ஏ.ஐ., தொழில்நுட்பம் 5260 யானைகள் தண்டவாளத்தில் வந்தது கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:04 AM

மதுரை: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ., )
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2024 பிப். முதல் 2025 மே வரை, அப்பகுதி ரயில் தண்டவாளத்தை 5260 யானைகள் பத்திரமாக கடக்க வனத்துறை உதவியுள்ளது.
கோவை மதுக்கரை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 694 கிலோ மீட்டர் பரப்பளவில் 200 யானைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. 2008 முதல் 2024 வரை இந்தப் பகுதியில் உள்ள கோவை - பாலக்காடு வழித்தடத்தில் எட்டிமடை - வாழையார் செல்லும் ஏ, பி என்ற இரண்டு தண்டவாளங்களை கடந்து சென்ற 11 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு 120 ரயில்கள் வந்து செல்கின்றன.
யானைகள் இறப்பை தவிர்க்கும் வகையில் மதுக்கரை பகுதியில் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.7.24 கோடி நிதி ஒதுக்கியது. இரு தண்டவாள வழித்தடங்களில் 7.05 கி.மீ., தூரம் வரை 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கையால் சுழலும் (மேனுவல்) வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கேமராவும் குறைந்த பட்சம் 150 மீட்டர் துாரத்திற்குள் தண்டவாளம் அருகே யானைகள் வருவதை அதன் உடல் வெப்பநிலை, நடமாட்டம் மூலம் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும். அங்கிருந்து ரயில்வே, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்வே லோகோ பைலட்டுகளுக்கு அலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும்.
கண்காணிப்பு கோபுரத்தை சுற்றி 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்கள் தண்டவாளத்திற்கு சென்று சென்று ரயில் வரும் நேரத்தில் யானைகள் வந்தால் அவற்றை தற்காலிகமாக திசை திருப்புகின்றனர். ரயில் சென்ற பின் அவை தன் பாதை வழியே செல்கின்றன. மேலும் ஆங்காங்கே தடுப்பு காரிடார்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக ரயில்வே தண்டவாளத்தின் சுரங்கப்பாதை பகுதி வழியாக யானைகள் செல்வதையும் மடைமாற்றுகின்றனர். சில நேரங்களில் யானைகள் அருகில் வந்துவிட்டால் ரயில் உடனடியாக நிறுத்தப்படுகிறது.
2024 பிப்., முதல் மே 2025 வரை, கட்டுப்பாட்டு அறைக்கு 1260 அழைப்புகள் பெறப்பட்டு இதன் மூலம் தனியாகவோ, கூட்டமாகவோ சென்ற 5260 யானைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பின் ஒரு யானை கூட ரயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்கின்றனர் வனத்துறையினர்.