/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு விசாரணையை சந்திக்க அ.தி.மு.க., ரெடியா...: மதுரை மாநகராட்சி அவசரக்கூட்டத்தில் தி.மு.க., 'கிடுக்கிப்பிடி'

ADDED : அக் 18, 2025 04:04 AM

மதுரை: 'அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு விசாரணையை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாரா' என மதுரை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு விவகாரம் எதிரொலியாக மேயர் இந்திராணி தனது பதவியை அக்., 16ல் ராஜினாமா செய்தார். அதை ஏற்பது தொடர்பான அவசரக் கூட்டம் துணைமேயர் நாகராஜன், கமிஷனர் சித்ரா தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது மாநகராட்சி மன்றச் செயலாளர் சித்ரா, மேயர் ராஜினாமா தொடர்பான தீர்மானத்தை வாசித்தார்.
அதில் 'குடும்பச் சூழல் காரணமாக இந்திராணி ராஜினாமா செய்துள்ளதாக' குறிப்பிட்டார். அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் ஏற்கப்பட்டதாக கூறி, 5வது நிமிடத்தில் கூட்டம் நிறைவு பெறுவதாக கமிஷனர், துணை மேயர் அறிவித்தனர்.
அப்போது அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேட்டை முதலில் அ.தி.மு.க., தான் வெளிக்கொண்டுவந்தது.
அதன் தொடர்ச்சியாக மேயர் பதவி விலகியுள்ளார். இது எங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
இதனால் கடுப்பான தி.மு.க., கவுன்சிலர்கள் குழுத் தலைவர் ஜெயராம், கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான், கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரோஹிணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, 'மாநகராட்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராள முறைகேடுகள் நடந்தன. அதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் விசாரணையை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாரா' என கோஷமிட்டனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம் கூட்டம் முடிந்த பின் 45வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சண்முகவள்ளி, தனது வார்டில் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகள் தீரவில்லை. மக்கள் கேள்வி கேட்கின்றனர் என ஒரு மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்ட அரங்கில் லைட்டுகள், ஏசி 'ஆப்' செய்யப்பட்டது. இதனால் இருட்டிலும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரிடம் துணைமேயர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அவரது வார்டில் துணைமேயர் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.