/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திமில் பிடித்த வீரர்களை துவம்சம் செய்த காளைகள் அதகளமானது அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு
/
திமில் பிடித்த வீரர்களை துவம்சம் செய்த காளைகள் அதகளமானது அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு
திமில் பிடித்த வீரர்களை துவம்சம் செய்த காளைகள் அதகளமானது அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு
திமில் பிடித்த வீரர்களை துவம்சம் செய்த காளைகள் அதகளமானது அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு
ADDED : ஜன 18, 2024 02:26 AM

மதுரை:'வந்து பார்...' என நெஞ்சை நிமிர்த்திய வீரர்களும், 'நின்னு பார்...' என திமிலை சிலுப்பிய காளைகளும், அனல் பறக்க களம் கண்ட மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அதகளப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பரவசமடையச் செய்தது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, முனியாண்டி கோவில் திடல் வாடிவாசலில் காலை 7:00 மணிக்கு வீரர்கள் உறுதிமொழியேற்புடன் துவங்கியது.
அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார்; அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், கலெக்டர் சங்கீதா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முதல் சுற்றில் 40 மாடுகள் களம் இறக்கிவிடப்பட்டதில் 7 காளைகளை மட்டுமே வீரர்கள் அடக்கி பரிசு வென்றனர்.
தலா 50 வீரர்கள் என 10 சுற்றுகளாக 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் களம் இறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆக்ரோஷமாக பார்வையில் மிரட்டி வாடிவாசல் வெளியே துள்ளிக் குதித்த மாடுகளை தாவி, திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கினர். திமில் பிடித்த வீரர்களை துாக்கி வீசின, காளைகள்.
கெத்து காட்டிய காளைகளுக்கும், தொட்டு அடக்கிய வீரர்களுக்கும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, மெத்தை, சேர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் விழா குழுவினரால் கொடுக்கப்பட்டன.
காளைகளின் கொம்புகள் குத்தியும், துாக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தும் வீரர்கள், போலீசார், பார்வையாளர்கள் என 83 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் நேற்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில், உற்சாகமாக பங்கேற்ற காளைகளும், காளையர்களும்.