/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 10 தொகுதியில் தி.மு.க.,வுக்கு மிஞ்சுவது எத்தனை; நான்கு தொகுதிகள் கேட்டு கூட்டணிக் கட்சிகள் மல்லுக்கட்டு
/
மதுரையில் 10 தொகுதியில் தி.மு.க.,வுக்கு மிஞ்சுவது எத்தனை; நான்கு தொகுதிகள் கேட்டு கூட்டணிக் கட்சிகள் மல்லுக்கட்டு
மதுரையில் 10 தொகுதியில் தி.மு.க.,வுக்கு மிஞ்சுவது எத்தனை; நான்கு தொகுதிகள் கேட்டு கூட்டணிக் கட்சிகள் மல்லுக்கட்டு
மதுரையில் 10 தொகுதியில் தி.மு.க.,வுக்கு மிஞ்சுவது எத்தனை; நான்கு தொகுதிகள் கேட்டு கூட்டணிக் கட்சிகள் மல்லுக்கட்டு
UPDATED : பிப் 28, 2026 07:03 AM
ADDED : பிப் 28, 2026 06:55 AM

மதுரை: மதுரையில் 10ல் நான்கு தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதால் தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில், 2021 சட்டசபை தேர்தலில் மதுரை கிழக்கு, வடக்கு, மத்தி, தெற்கு, சோழவந்தான் (தனி) தொகுதிகளை தி.மு.க., வென்றது. மதுரை மேற்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலுார், உசிலம்பட்டி ஆகிய 5 தொகுதிகளை அ.தி.மு.க., வென்றது.
'வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்; 200க்கும் மேல் வெற்றி லட்சியம்' என்ற முழக்கத்துடன் தி.மு.க., தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது. 10 தொகுதிகளிலும் மதுரையில் வெற்றி பெற அமைச்சர் மூர்த்திக்கு தி.மு.க., தலைமை 'அசைன்மெண்ட்' கொடுத்துள்ளது.
அதேநேரம் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு காங்., தே.மு.தி.க., ம.தி.மு.க., ம.நீ.ம., வி.சி., என கூட்டணி கட்சிகள் தலா ஒரு தொகுதியை மதுரையில் பெற்றுவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றன.
இதனால் வேட்பாளர் கனவில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால், தி.மு.க.,வினர் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். அதேநேரம் அதிருப்தியாகும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் முழு மனதுடன் தேர்தல் பணியாற்றுவார்களா என கூட்டணி கட்சிகளுக்கு குழப்பம் ஏற்படும். மொத்தத்தில் தொகுதி ஒதுக்கீட்டில் மதுரை தி.மு.க.,வுக்கு சவால் காத்திருக்கிறது.
தி.மு.க.,வினர் கூறியதாவது: இந்த தேர்தலில் சில தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்ற கணக்கில் தான் தொகுதிகள் எண்ணிக்கையையே கூட்டணி கட்சிகள் முடிவு செய்கின்றன. அந்த வகையில் மதுரையில் ம.தி.மு.க., தெற்கு (சிட்டிங் எம்.எல்.ஏ.,), காங்., வடக்கு, மார்க்சிஸ்ட் மேற்கு தொகுதிகளையும் கேட்கின்றன. இதுதவிர தே.மு.தி.க., ம.நீ.ம., வி.சி.,யும் தலா ஒரு தொகுதி கேட்டு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் கூட்டணியில் ம.தி.மு.க., காங்., மார்க்சிஸ்ட்டுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கப்பட்டது. இம்முறை தே.மு.தி.க., ம.நீ.ம., வி.சி., நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது.
மதுரை மேற்கு தொகுதி முதல்முறையாக அமைச்சர் மூர்த்தி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. அத்தொகுதியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். அங்கு தி.மு.க., தான் போட்டியிட வேண்டும். கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு தெற்கு (தி.மு.க., சின்னம்) மார்க்சிஸ்ட்டுக்கு ஏற்கனவே ஒதுக்கிய திருப்பரங்குன்றம், காங்.,க்கு மேலுார் என மொத்தம் மூன்று மட்டுமே கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும். 7 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என தலைமைக்கு கடிதம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிக தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்தால் தி.மு.க.,வுக்குள் அதிருப்தி ஏற்பட்டு, தேர்தல் பணி பாதிக்கும் சூழல் ஏற்படும் என்றனர்.

