/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழமையான வன்னிமரம் சாய்ந்தது; மீண்டும் நடப்பட்டது
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழமையான வன்னிமரம் சாய்ந்தது; மீண்டும் நடப்பட்டது
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழமையான வன்னிமரம் சாய்ந்தது; மீண்டும் நடப்பட்டது
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழமையான வன்னிமரம் சாய்ந்தது; மீண்டும் நடப்பட்டது
ADDED : மார் 21, 2026 12:51 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியின் வன்னிமரம் வேரோடு சாய்ந்தது. மரம் நன்றாக பசுமையாக இருப்பதால் அதையே மீண்டும் கோயில் நிர்வாகம் நட்டது.
இக்கோயிலின் கிழக்கு கோபுரத்தில் இருந்து ஆடிவீதிக்கு செல்லும்போது இடதுபுறத்தில் இச்சன்னதி உள்ளது. திருஞானசம்பந்தரின் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை இச்சன்னதியையொட்டியே நடக்கும்.
நேற்று அதிகாலை கோயில் பகுதியில் மழை பெய்ததில் பழமையான வன்னிமரம் வேரோடு சாய்ந்தது பக்தர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது. மண்ணின் ஈரபதம் காரணமாகவும், அதிக எடை காரணமாகவும் சாய்ந்தது தெரிந்தது.
பட்டர்கள் கூறுகையில், ''சிவாலயங்களில் தென்கிழக்கு மூலையில் அதாவது அக்னி மூலையில் வாஸ்துக்காக சுவாமிக்கு உகந்த மரங்கள் நடப்படுவது வழக்கம். அந்த வகையில் வன்னிமரம் இங்கு நுாற்றாண்டுகளுக்கு முன் நடப்பட்டது. 2009ல் இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளின்போது வடகிழக்கு ஆடி வீதியில் அரசமரம் ஒன்று சாய்ந்தது'' என்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை இணைகமிஷனர் சுரேஷ் தலைமையிலான குழுவினர், சாய்ந்த மரத்தின் கிளைகளை அகற்றி எடையை குறைத்து மீண்டும் நட்டனர்.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறுகையில், ''வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியில்தான் பெண், மாப்பிள்ளை பார்ப்பது, வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவை நடந்துவருகிறது.
நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோயிலில் உள்ள மற்ற மரங்களின் உறுதிதன்மை குறித்து கோயில் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறுகையில், ''வன்னிமரம் அருகே கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக பிரசாதங்களை தயார் செய்து வருகிறது.
இதனால் வெளியேறும் வெப்பத்தால் மரத்தின் இலைகள் பட்டுப்போயின. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன் கோயில் நிர்வாகத்திடம் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. இனியாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.

