/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பால்குடியில் பழமை வாய்ந்த பெருங்கற்கால சின்னங்கள்
/
பால்குடியில் பழமை வாய்ந்த பெருங்கற்கால சின்னங்கள்
ADDED : டிச 17, 2024 04:18 AM

மதுரை: கொட்டாம்பட்டி கச்சிராயன்பட்டி ஊராட்சி பால்குடியில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் ஆவணம் செய்யப்பட்டன.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன் கூறியதாவது: இங்குள்ள அருவிமலை உச்சியில் 13ம் நுாற்றாண்டு பாண்டியர் கால சிவன் கோயிலின் அதிட்டான பகுதி, அருகேயுள்ள பாறை, கோயில் மலைப்பாதை படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மாநில தொல்லியல் துறை 2005ல் வெளியிட்ட மதுரை மாவட்ட கல்வெட்டு தொகுதி (முதல் தொகுதி) நுாலில் இக்கல்வெட்டு பற்றி தகவல் உள்ளது.
அருவிமலை சிவன் கோயிலை பராமரித்து வரும் பால்குடியைச் சேர்ந்த கதிரேசன் தகவலின் பெயரில் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் பால்குடி கிராமத்தில் கற்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்களை ஆவணப்படுத்தினோம். இரும்புக்காலத்தில் நீத்தார் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு சின்னங்கள் மிகபெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டதால் என்றும் அழைக்கப்படுகிறது. அருவிக்குளம், சின்ன அருவிக்குளம் நீர்நிலை, வயல்வெளி, மதலை, அய்யனார் கோயில் பகுதிகளில் பெருங்கற்கால சின்னங்கள் விரவி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்றார்.

