/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே பாரபட்சம்; அங்கன்வாடி ஊழியர்கள் குமுறல்
/
சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே பாரபட்சம்; அங்கன்வாடி ஊழியர்கள் குமுறல்
சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே பாரபட்சம்; அங்கன்வாடி ஊழியர்கள் குமுறல்
சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே பாரபட்சம்; அங்கன்வாடி ஊழியர்கள் குமுறல்
ADDED : டிச 30, 2024 05:49 AM

மதுரை : சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே சம்பளம் பெறுவதில் பாரபட்சம் உள்ளது'' என ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மனம் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் பெறுகின்றனர்.
இவர்களுக்குள் சம்பளம் விகிதத்தில் பெரும் வேறுபாடு உள்ளதாக ஐ.சி.டி.எஸ்., மையம் எனப்படும் அங்கன்வாடி ஊழியர்கள் குமுறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.11 ஆயிரம். எங்களுக்கு ரூ.7 ஆயிரம்தான். அவர்கள் ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் பெறும் நிலையில், எங்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 ஆயிரமே தருகின்றனர். பத்தாண்டுகள் பணிபுரிந்த கிராம உதவியாளர்கள் வி.ஏ.ஓ.,வாக பதவி உயர்வில் சென்று விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகள் ஆனாலும் பதவி உயர்வு வருவதில்லை.
அதற்குள் ஓய்வு பெறும் நிலைக்கு வந்துவிடுகிறோம். இதனால் பதவி உயர்வு மிகவும் தாமதமாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி கிராம உதவியாளர்களை உள்ளடக்கிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் போனஸாக வழங்கப்படுகிறது. ஆனால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. ஆயிரமே வழங்கப்படுகிறது.
அதேபோல ஓய்வு பெறும்போது எங்களுக்கு பணிக்கொடையாக ரூ. ஒரு லட்சம் வழங்குகின்றனர். அதேசமயம் கிராம உதவியாளர்களுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதுபோன்ற வேறுபாடுகளை களைந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றனர்.
இதனிடையே ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் மஞ்சுளா தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் வாசுகி உட்பட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள் குறித்து மாவட்ட செயலாளர் மேனகா கூறியதாவது: சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோரிடையே பாரபட்சம் உள்ளது. மேலும் ஐ.சி.டி.எஸ்.,. திட்டத்தில் 42 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6850 ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்களைப் போல 16.5 மாத கால ஊதியத்தை பணிக்கொடையாக வழங்க வேண்டும்.
கல்வித்தகுதியுள்ள அங்கன்வாடி ஊழியர்களை அரசு துறைகளுக்கு மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தற்காலிக பணிநீக்கத்திற்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். ஆறுஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம் என்றார்.