துாத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சி.பி.ஐ.,க்கு எதிராக முறையீடு
துாத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு சி.பி.ஐ.,க்கு எதிராக முறையீடு
ADDED : செப் 26, 2026 05:18 AM
மதுரை: துாத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை முறையாக விசாரிக்காததால் சி.பி.ஐ.,இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் வழக்கறிஞர் ஏ.கண்ணன் ஆஜராகி முறையிட்டதாவது: துாத்துக்குடியில் 2018 மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிசூடு நடந்தது. 13 பேர் பலியாகினர். இதில் சி.பி.ஐ.,விசாரணை, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் கோரி 2018ல் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கலாகின.
2018 ஆக.,14 ல் உயர்நீதிமன்றம், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது போலீசார் மீது சி.பி.ஐ., வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். உண்மைகளை முழுமையாக கண்டறிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.
சி.பி.ஐ.,முறையாக விசாரிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் திருமலை மீது மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. சி.பி.ஐ.,இயக்குனர் பிரவீன் சூட் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே பொதுநல மனு செய்தவர்களில் ஒருவரான கதிரேசன் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதிகள், நிலுவையிலுள்ள பொதுநல மனுக்களோடு சேர்த்து செப்., 28ல் விசாரிக்கப்படும்,' என்றனர்.
