ADDED : மே 08, 2025 03:34 AM
உசிலம்பட்டி: பட்டாசு, ஒலிபெருக்கி, மதுவுக்கு தடை விதித்த கிராம மக்களுக்கு வருவாய், போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி வி.பெருமாள்பட்டியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஏப்.14 ல், கிராம மந்தையம்மன் கோயிலில் கூட்டம் நடந்தது. இதில் இல்ல விழா ஊர்வலங்களில் பட்டாசு வெடிப்பதால் விபத்துகள், பிரச்னைகள் உருவாவதால் பட்டாசு வெடிக்கக் கூடாது. மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், போலீசில் புகார் செய்யப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிபெருக்கி அமைக்கக் கூடாது.
கிராமத்தில் போதைப்பொருட்கள் விற்கக் கூடாது. உள்ளூர் மக்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அதனை கடைபிடித்தும் வருகின்றனர். போலீஸ் டி.எஸ்.பி., சந்திரசேகர், தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்பட அதிகாரிகள் வி.பெருமாள்பட்டி கிராமத்திற்கு சென்று பொதுமக்களை பாராட்டினர்.