/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இப்படி பண்றீங்களேம்மா: சேதமடையும் கிராம இணையதள கேபிள் அமைப்புப் பணி
/
இப்படி பண்றீங்களேம்மா: சேதமடையும் கிராம இணையதள கேபிள் அமைப்புப் பணி
இப்படி பண்றீங்களேம்மா: சேதமடையும் கிராம இணையதள கேபிள் அமைப்புப் பணி
இப்படி பண்றீங்களேம்மா: சேதமடையும் கிராம இணையதள கேபிள் அமைப்புப் பணி
ADDED : மார் 29, 2025 05:28 AM

மதுரை: மதுரை மாவட்ட கிராமங்களில் அரசின் 'டான்பிநெட்' இணையதள சேவைக்கான கட்டமைப்பு பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. பல கிராமங்களில் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சேதமடைவதால் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.
மத்திய அரசின் திட்டமாக தமிழ்நாடு பைபர் நெட் (TANFINET) என்ற அமைப்பு சார்பில் தமிழக கிராமங்களில் இணையதள சேவையை உருவாக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் ஒன்றியங்களுக்கும், அங்கிருந்து கிராமங்களுக்கும், பின்னர் அருகில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், விவசாய, சுகாதார நிலையம், கால்நடைமருத்துவமனை, மருந்தகம், மின்வாரியம், பள்ளிகள் என அரசு நிர்வகிக்கும் கட்டடங்களுக்கு இணையதள சேவைக்கான கேபிள் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
75 சதவீத பணிகள் நிறைவு
இதற்காக ரூ.பல கோடி திட்டத்தை சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர். வடமாவட்டங்கள் பலவற்றிலும் இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மதுரையில் இப்பணிகள் கலெக்டரின் கண்காணிப்பில் நடக்கின்றன. இதுவரை கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 27 கிராமங்கள், கள்ளிக்குடியில் 38 கிராமங்களில் முழுவதுமாக கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் ஓரிரு மாதங்களில் முழுவதும் நிறைவுபெறும்.
சில ஆண்டுகளாக நடந்து வரும் பணி மாவட்ட அளவில் 75 சதவீதம் நடந்துள்ளது. இங்குள்ள 13 ஒன்றியங்களிலும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராமங்களுக்கு பூமிக்கு அடியிலும், சில பகுதியில் பூமியின் மேற்பரப்பில் கம்பங்களை நட்டும் கேபிள்களை கொண்டு செல்கின்றனர். மாவட்ட அளவில் பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும்.
40 கி.மீ., கேபிள்கள் பாதிப்பு
இருப்பினும் பல கிராமங்களில் இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை. அறுவடை செய்த விளைபொருளை ரோடுகளில் வைத்து பிரித்தெடுக்கின்றனர். அதில் மிஞ்சும் கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனர். அதனால் பூமியின் மேல் செல்லும் கேபிள்கள் உருகி பாதிப்படைகின்றன. இவ்வகையில் கள்ளிக்குடி - காரியாபட்டி ரோடு, கள்ளிக்குடி - அரசபட்டி ரோடு உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் மொத்தம் 40 கி.மீ., மேலான கேபிள்கள் பாதிப்படைந்துள்ளன. பல இடங்களில் கேபிள் ஒயர்களை அறுப்போராலும் பாதிப்படைகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் பலர் வடமாநிலத்தவர். பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு சென்று திரும்ப சிலநாட்கள் எடுத்துக் கொள்வதாலும் பணிகள் சுணங்குகின்றன.
கிராமங்கள் அனைத்தையும் இணையதளம் மூலம் இணைக்கும் இச்சேவையால், பொதுமக்கள் எல்லாவித அரசு உத்தரவுகள், திட்டங்கள், சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் குறைந்த செலவில் பெற முடியும். வரும் காலங்களில் கிராமங்களும் நகரங்களுக்கு இணையான தொடர்பு வசதியை பெறும் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.