/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்
/
கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : நவ 07, 2024 02:28 AM
திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் உலகாணியில் கல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று மேலக்கோட்டையில் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் நடந்தது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். உலகாணி, சின்ன உலகாணி, நெடுங்குளம், கல்லணை கிராம விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விவசாயிகள் பாதுகாப்பு குழு நேதாஜி பேசும்போது, ''சுற்றுச்சூழல் மாசுபடுவதால் சிறிய பூச்சிகள், பறவையினங்கள் அழிந்து வருகின்றன. கல்குவாரி அமைக்கும் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். குவாரி புதிதாக அமைக்கப்படுவதால் அதைச் சுற்றியுள்ள வீடுகள், விவசாய நிலங்கள் பாதிக்கும்.
நிலத்தடி நீர் 800 அடிக்கு மேல் சென்று விடுகிறது. எனவே குவாரிக்கு அனுமதி தரக்கூடாது'' என்றார்.
இதையடுத்து கிராம மக்களில் சிலர், 'தங்களுக்கு குவாரி வேண்டும்' எனப் பேசினர். இதையடுத்து 'குவாரி தேவை, தேவையில்லை' என இருதரப்பினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
ஆர்.டி.ஓ., பேசுகையில், ''கருத்துக் கேட்புக் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும், எந்த கருத்தையும் தெரிவிக்கலாம். தங்கள் கருத்துக்களை பேச முடியாவிட்டால் மனுவாக எழுதித் தரலாம்'' என்றார்.