/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
/
ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி நிச்சயதார்த்தம்
ADDED : டிச 25, 2024 03:41 AM

ஆரியங்காவு : கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, நேற்று 'பாண்டி முடிப்பு' எனும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் கேரள, தமிழக பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தர்மசாஸ்தா சபரிமலையில் சன்னியாசி, குளத்துப்புழையில் பாலகன், ஆரியங்காவில் கிரகஸ்தன், அச்சன்கோயிலில் வனஅரசனாக அருள் பாலிக்கிறார். ஆரியங்காவில் தர்மசாஸ்தா, தன்னை உணர்ந்து, பர பிரம்மமும், ஜீவ பிரம்மமும் ஒன்றே என்று உணர்ந்த புஷ்கலா தேவியின் பக்தியை மெச்சி, தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம்.இவர் சவுராஷ்டிரா குலதேவி என்பதால், சடங்கு சம்பிரதாயங்கள் சவுராஷ்டிரா வழக்கப்படி நடக்கிறது. இதனால் திருவாங்கூர் மன்னர், தேவஸ்வம் போர்டு நிர்வாகம் சவுராஷ்டிரா சமூகத்தினரை 'சம்பந்தி'யாக கவுரவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி திருமண விழாவை நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு திருக்கல்யாண உற்ஸவம் டிச.23 ல் கேரள மாநிலம் மாம்பழத்துறையில் அம்மனின் ஜோதிரூப தரிசன வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் கல்மண்டபம் அருகில் பிரமுகர்கள் டி.கே.சுப்ரமணியன், கே.ஆர்.ராகவன், செயலாளர்கள் எஸ்.ஜெ.ராஜன், எஸ்.எஸ்.மோகன் தலைமையில் திரண்டு இருந்தனர்.கோயில் ஆலோசனைக் குழு தலைவர் அருண், செயலாளர் அனிகண்ணன், உதவித்தலைவர் சுதாராஜன் சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி மரியாதையுடன் வரவேற்றனர்.
புஷ்கலாதேவி பகவானோடு ஜோதிரூபத்தில் ஐக்கியமாகி, ஆனந்தமாக அம்பாள் வீற்று இருப்பதை கொண்டாடும் வகையில், 'பாண்டியன் முடிப்பு பொங்காலா' என்ற வைபவம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு 'தாலப்பொலி ஊர்வலம்' எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் கேரள பெண்கள், குழந்தைகள் குருத்தோலை சுகந்த துாப தீப விளக்குகளை ஏந்தி பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு ராஜகொட்டார அரங்கில் நிச்சயதார்த்தம் நடந்தது. பகவான் சார்பில் திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி விஷேஸ், அம்பாள் சார்பில் சங்கத் தலைவர் டி.கே.சுப்ரமணியன் பிரதிநிதிகளாக மாலை மாற்றினர்.
இன்று (டிச.25) அதிகாலை மூலஸ்தானத்தில் பகவானுக்கு அபிஷேகம், காலை 9:00 மணிக்கு பொங்கல் படைப்பு, தெய்வங்களுக்கு வஸ்திர சாத்துபடி, ஊஞ்சல் உற்ஸவம், இரவு 7:00 மணிக்கு சப்பர புறப்பாடு, 8:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் பகவான், அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெறும்.

