/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோள்பட்டை ஜவ்வு கிழிசலுக்கு 'ஆர்த்ரோஸ்கோபி' கருவி
/
தோள்பட்டை ஜவ்வு கிழிசலுக்கு 'ஆர்த்ரோஸ்கோபி' கருவி
ADDED : ஜன 31, 2025 07:25 AM
மதுரை; மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு பிரிவில் தோள்பட்டை ஜவ்வு கிழிசலை சரிசெய்ய துல்லிய தன்மையுடன் கூடிய புதிய 'ஆர்த்தோஸ்கோபி' கருவி வாங்க டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இங்கு 2007 ல் முழங்கால் ஜவ்வு கிழிசலை சரிசெய்வதற்கான 'ஆர்த்ரோஸ்கோபி' கருவி வாங்கப்பட்டது.
ஓராண்டுக்கு முன்பாக தோள்பட்டை ஜவ்வு கிழிசலை சரிசெய்து இணைப்பதற்கான 'ஆர்த்ரோஸ்கோபி' கருவி வாங்கப்பட்டது. இதன் மூலம் 15 பேருக்கு தோள்பட்டை இணைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தோள்பட்டையில் மூன்று துளைகள் மூலம் கருவியை உள்ளே செலுத்தி கேமரா மூலம் கண்காணித்து ஜவ்வு சரிசெய்யப்படுவதால் காயம் எளிதில் ஆறிவிடும். ஆறு வாரத்தில் வேலை செய்யலாம். 12 வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
தோள்பட்டை ஜவ்வு கிழிசலை சரிசெய்வது, ஜவ்வு இறுக்கத்தை தளர்த்துவது, 'கேப்ஸ்யூல்' போன்ற கிழிசலை சரிசெய்வது என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கருவிகள் தேவைப்படும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள்பட்டையை மேலே துாக்கமுடியாமல் ஜவ்வு இறுக்கமாக இருக்கும். 'ஆர்த்ரோஸ்கோப்' கருவி மூலம் இறுக்கத்தைதளர்த்தினால் அவர்கள் பழைய நிலையில் தோள்பட்டையை அசைத்து துாக்க முடியும்.
விபத்தில் அடிபட்டோ, வலிப்பு வரும் போதோ, மாடியில் இருந்து விழும் போதா, வயதானவர்கள் வழுக்கி விழும் போதோ, நடந்து செல்லும் போது தவறி விழும் போது தோள்பட்டை விலகுதலும் ஜவ்வு கிழிதலும் ஏற்படுகிறது.
தோள்பட்டை விலகி முன்பக்கம் ஜவ்வு கிழிசல் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் தோள்பட்டை விலகும் பிரச்னை ஏற்படும். வயதானவர்களுக்கு தோள்பட்டை மேல் பகுதியில் அசைவு காரணமாக 'ரொட்டேட்டர் கப்' ஜவ்வில் கிழிசல் ஏற்படும். அதையும் சரிசெய்யலாம்.
சிலர் நாட்டுக்கட்டு, பற்று போடுதல் போன்ற பழைய முறைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சில நாட்களிலேயே மீண்டும் தோள்பட்டை விலகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆரம்பத்திலேயே சரிசெய்தால் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டியதில்லை.
தற்போதுள்ள கருவிகளை விட புதிய கருவிகளை துல்லியமாக கேமராவில் கண்காணித்து சரிசெய்ய முடியும் என்பதால் டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கோரிக்கை வைத்த போது கருவி வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இன்னும் நிறைய நோயாளிகள் பயன்பெறுவர் என்றனர்.

