ADDED : ஜூலை 27, 2025 07:20 AM
எனக்கு பித்த உடம்பு என்று சித்தா டாக்டர் கூறினார். பித்த உடம்பு என்றால் என்ன.
- -அனுஸ்ரீ, மதுரை
நாம் உண்ணும் உணவு, உடலின் இயல்பான தன்மை, சுற்றுப்புற வெப்பம், குளிர்ச்சிக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியன வறட்சி, வெப்பம், குளிர்ச்சி ஆகிய தன்மைகளை உடையன. உணவில் சேர்க்கப்படும் உப்பு, புளிப்பு, காரச் சுவைக்கு ஏற்றார் போல் உடம்பில் பித்தம் அதிகரிக்கும்.
பித்தம் உடலின் உள்ளுறை வெப்பத்தை அதிகரிக்கும். உடலில் பித்தம் அதிகரித்தால் உடல் சூடு, சிறுநீர் செல்லும்போது எரிச்சல், கண் எரிச்சல், தொண்டை, வாய் உலர்தல், ஆசனவாய் பகுதியில் வறட்சி, உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி வருதல் அல்லது பசியின்மை ஏற்படலாம். இதற்கு சித்தா டாக்டரின் ஆலோசனை பெற்று கரிசாலை லேகியம் அல்லது நெல்லிக்காய் லேகியத்தை ஐந்து கிராம் வீதம் தினமும் ஒருவேளை சாப்பிடலாம். இஞ்சி வடகம் மாத்திரையை காலையிலும் இரவிலும் உணவுக்கு பின் சாப்பிடலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெல்லிக்காய் தைலம் அல்லது சீரகத் தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பித்தம் தணியும்.
-- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ் சித்த மருத்துவ நிபுணர்மதுரை
மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப் போக்கு, முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இவை எடை அதிகரிக்க காரணமாகி விடுமா.
- மாலதி, பண்ணைக்காடு
முறையற்ற மாதவிடாய்க்கு ஹார்மோன் சமநிலை குறைவு, கர்ப்பபையில் நீர் கட்டி, சில மருந்துகளின் பக்க விளைவு, மன அழுத்தம் காரணமாக உள்ளது. இதை மாதம் தோறும் கவனிக்க வேண்டும். மாதவிடாய் 7 நாட்களுக்கு மேல் நீடிக்கிறதா, 21 நாட்களுக்கு குறைவாகவும், 35 நாட்களுக்கு மேலாக இருக்கிறதா, மயக்கம், கடுமையான வயிற்று வலி, சோர்வு உள்ளிட்டவை இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். இதற்கு நல்ல துாக்கம், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதே இதை சரி செய்ய ஏதுவானதாக இருக்கும்.
-டாக்டர் நீத்துகிரண் ரவீந்திரன்பொது நல மருத்துவர்கொடைக்கானல்
-------- எனக்கு திருமணம் ஆகவில்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக தாங்க முடியாத இருமல் பாதிப்பு உள்ளது. ஆறு மாதங்களாக விட்டுவிட்டு இப் பிரச்சினை ஏற்படுகிறது. காச நோயாக இருக்குமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. காசநோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன விளக்கவும்.
- எம்.பிரியம்வதனா, தேனி
தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டால் காசநோய் என ஒருபோதும் நம்பிவிட வேண்டாம். காசநோய் பாதிப்பை கண்டறிய அறிகுறிகள் உள்ளன. பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் சிகிச்சை அளித்து காப்பாற்றிடலாம். இதன் அறிகுறிகளாக தொடர் இருமல் பாதிப்பு ஏற்படுதல், மாலையில் காய்ச்சல் ஏற்பட்டு, பின் விட்டு விட்டு பாதிப்பு தெரிவது, சளியில் ரத்தம் வருதல், உடல் எடை குறைதல், பசியின்மை உள்ளிட்டவை அறிகுறிகள் ஆகும். தொடர் இருமல் பாதிப்பை மட்டுமே வைத்து காசநோய் என தீர்மானிக்க கூடாது. உடனடியாக எக்ஸ்ரே, சளி பரிசோதனை செய்வது அவசியம். மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- டாக்டர் ராஜபிரகாஷ்துணை இயக்குனர்மாவட்ட காசநோய் தடுப்பு துறை தேனி
எனது மார்பகத்தில் கட்டி உள்ளது. வலி ஏதும் இல்லை. இதனால் பாதிப்பு ஏற்படுமா.
--ஜி.ரத்தினாதேவி, ராமநாதபுரம்
பொதுவாக 20 முதல் 40 வயதுள்ள பெண்கள் மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடக்கூடாது. மார்பகத்தில் உள்ள கட்டியில் வலி இருந்தால் அது மார்பக புற்றுநோய் இல்லை என தெரிந்து கொள்ளலாம். வலி இல்லாமல் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கட்டியிருந்தால் அது மார்பக புற்றுநோய் பாதிப்பாக இருக்கும். பெண்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு முடிந்த 3 முதல் 5 நாட்கள் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் வீட்டில் தாய், பாட்டி போன்றவர்களுக்கு இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே வலது புறம் பாதித்தவர்களுக்கு இடது புறம் வர வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
-டாக்டர் கே.பிரியங்கா பொது அறுவை சிகிச்சை மருத்துவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
சிறுநீரக செயலிழப்பிற்கு காரணம் என்ன
- -அ.பிரியா, சிவகங்கை
சிறுநீரகம் நம் உடலில் நீர் சத்து சீராக இருக்கவும் நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. கால்சியம் சத்து சீராக இருக்கவும் ஹீமோகுளோபின் உருவாவதற்கான ஹார்மோன் சுரக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாலும், ரத்த அழுத்தத்தாலும் சிறுநீரகம் பாதிப்படுகிறது.
அதிக ரசாயனம் கலந்த உணவு உண்பதாலும், அடிக்கடி வலி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்க ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலில் ஏற்படும் பிரச்னைக்கு டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து மாத்திரைகளை உண்ணக்கூடாது.
சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் இளநீர், சாக்லேட், பேரிச்சம்பழம் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும். முறையான உடல் பரிசோதனை செய்து டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
- - டாக்டர் கல்யாணசுந்தரம்உதவி பேராசிரியர்பொது மருத்துவம்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
எனக்கு 40 வயது ஆகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு டூவீலரில் செல்லும்போது விபத்தில் கீழே விழுந்ததில் கை மணிக்கட்டு, கட்டை விரலில் அடிபட்டது. அப்போது வலி தெரியாத நிலையில் தற்போது வீக்கமாக உள்ளது. சரியாக என்ன செய்யலாம்.
- -பாண்டியன், சிவகாசி
கீழே விழுந்த நிலையில் வீக்கம் இல்லாவிட்டால் உள்ளே காயம் எதுவும் இல்லை. தொடர்ந்து அலைபேசி பயன்படுத்தியதாலும் அல்லது வாகனம் ஓட்டியதாலோ கட்டை விரலுக்கு வேலை கொடுப்பதால் வீக்கம் ஏற்பட்டிருக்கும். தற்போது வீக்கம், வலி உள்ளதால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்க வேண்டும்; சிகிச்சை எடுக்க வேண்டும்.
- -டாக்டர் பாரத்அறுவை சிகிச்சை நிபுணர்இ.எஸ்.ஐ.,மருத்துவமனை சிவகாசி