sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டாக்டரை கேளுங்கள்

/

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


ADDED : மே 24, 2025 09:20 PM

Google News

ADDED : மே 24, 2025 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகை பிடிப்பதால் பற்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்.

- தவச்செல்வி, மதுரை

புகை பிடிப்பது உடலிற்கு எந்த அளவு தீங்கு விளைவிக்குமோ அதே அளவு வாய் , பற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். முதல்கட்டமாக பற்கள் பழுப்பு நிறத்தில் மாறும். நீண்ட காலம் புகை பிடிப்பவர்களின் பற்கள் கருப்பாகி விடும். இப்படி படியும் கறைகள் பின்னர் காரைகளாக மாறும். இந்த காரைகளே கிருமிகள் தங்கும் இடமாகும். இது பற்களை சுற்றியுள்ள ஈறுகளையும் எலும்பையும் அரிக்க ஆரம்பிக்கும். இதனால் சொத்தையே இல்லாமல் கூட பற்கள் ஆடி விழுந்து விடும் நிலை உருவாகும்.

புகை பிடிப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் பல் சொத்தை மற்றும் ஈறுநோய்கள் எளிதாக உருவாகும். ஈறுகளுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் ரத்தஓட்டம் குறைவாக இருக்கும். ஈறுகள் பலவீனமாக மாறும். பல் தேய்க்கும் போது ரத்தம் வரலாம். உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வாக இருப்பது போன்றிருக்கும். உண்ணும் உணவின் சுவை சரியாக தெரியாது. வாய் புற்றுநோய் வருவதற்கு முதல் காரணமே புகை பிடிப்பதும் புகையிலை பயன்படுத்துவதும் தான்.

- டாக்டர் ஜெ. கண்ணபெருமான் பல் சீரமைப்பு நிபுணர்மதுரை

முடக்கு வாதம் நோயை கண்டறிவது, அதை தீர்ப்பதற்கான வழி என்ன

- வி.தர்மர், ஆர்.கோம்பை

இந்த நோய் பாதிப்பு பொதுவாக முடக்கு வாதம், சரவாங்கி, கணுச்சூளை என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் விரல் மூட்டுக்கள் முதல், முழங்கால், இடுப்பு, கணுக்கால் போன்ற மூட்டுகளையும் அதன் ஜவ்வுகளையும் இந்த நோய் பாதிப்பு விட்டு வைப்பதில்லை. மூட்டு வலி, தசை வலி, மூட்டில் இறுகும் தன்மை, சோர்வு, காய்ச்சல், ரத்த சோகை என இதன் அறிகுறிகள் பல்வேறு வகைகளில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த வலியின் போது ஓய்வு தேவை.

-- டாக்டர் எஸ்.லோகநாதன் தலைமை மருத்துவர்அரசு மருத்துவமனைவேடசந்துார்

என் மகளுக்கு ஓராண்டு 2 மாதம் வயதாகிறது. நாங்கள், குழந்தையின் பாட்டி, தாத்தாக்கள் என மகளுக்கு நெருக்கமான யார் தாலாட்டு,சோகப்பாட்டு பாடும் போது தேம்பித் தேம்பி அழுகிறது. பின் மகிழ்ச்சியான பாடல் பாடினால் அழுகையை நிறுத்துகிறது. வாயால் சோகப்பாடல் ஒரு நிமிடம் முனங்கினாலோ, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாவதை கேட்டாலோ குழந்தை அழுவது தொடர்கிறது. இது குழந்தைக்கு வேறு பாதிப்பாக இருக்குமா என மனக்குழப்பத்தில் உள்ளோம். தெளிவுபடுத்தவும்.

- -கணேஷ் -- விஜி தம்பதிசமதர்மபுரம், தேனி

குழந்தைகளின் மூன்று வயது வரை அனிச்சை செயல்கள் வளரும் பருவமாகும். குழந்தைகளுக்கு இது இசை, இது பாட்டு, இது சோகம், இது சந்தோஷம், கோபம் என புரிந்து கொள்ள இயலாது. அம்மாதிரியான அனிச்சை செயல்கள், வளர வளர தானாகவே குழந்தைகளுக்கு மாறிவிடும்.

குழந்தைகள் அந்த சோகப்பாடல் இசைப்பதையோ, பாடுவதையோ இடையூறு ஏற்படுத்தும் ஒலியாகவே கருதும். இதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். கூடுமானவரை சந்தோஷமாக குழந்தைகளை கையாள வேண்டும். நல்ல மகிழ்ச்சியான பாடல்களை பாடி உற்சாகப்படுத்த வேண்டும். மெலடி, சோகப்பாடல்களை, பாடி துாங்கவைப்பதை தவிர்க்க வேண்டும். 2 வயது வரும்போது முற்றிலும் இது மாறிவிடும். நீங்கள் விரும்பினால் குழந்தையை மனநல மருத்துவ நிபுணரிடம் கூட்டிச் சென்றால் எளிதாக கண்டறிந்து விடுவர்.

- -டாக்டர் கோரா ராஜேஷ்மாவட்ட மனநல மருத்துவர்தேனி

இரவு நேரத்தில் துாக்கம் இல்லாமல் தவிக்கிறேன். தீர்வு உண்டா

- என்.ரத்தினம், ராமநாதபுரம்

இரவு நேரம் துாக்கம் கெட்டால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படும். செரிமான பிரச்னைகள் உண்டாகும். கோபம் அதிகமாக வரும். சர்க்கரை, ரத்த அழுத்தம் அதிகமானாலும் துாக்கம் கெடும். பணிகளில் குழப்பம் ஏற்படும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். இதய நோய் பிரச்னைகள் உருவாகும். துாக்கம் வருவதற்கு பணி சுமைகளை குறைக்க வேண்டும். நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். துாங்க போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

துாங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அலைபேசி, டிவி, கம்ப்யூட்டர் போன்றவைகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்னைகள் குறித்த சிந்தனை இருக்க கூடாது. தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மனம் அமைதியாக இருந்தால் துாக்கம் தானாக வரும்.

- டாக்டர் டி.முஹம்மது ஜாபர் சாதிக்பொதுநல மருத்துவ நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

வீடுகளில் சுய மருந்து எடுத்துக்கொள்வது சரியா

- அ.பாண்டியராஜன்,சிவகங்கை

நோய்க்கு உண்மையான காரணம் நமக்குத் தெரியாது. சுய மருந்து உட்கொள்வது தவறான மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். இரைப்பை அழற்சி, ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் நோய்கள் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக் போன்ற சுய மருந்துகளை பயன்படுத்துவது பாக்டீரியாவை வலிமையாக்கும். வலி நிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது உண்மையான பிரச்னையைக் குணப்படுத்தாமல் அறிகுறிகளை மறைக்ககூடும். இது டாக்டரின் சரியான சிகிச்சையை தாமதப்படுத்தும். இதனால் சிலர் மருந்துக்கு அடிமையாகி அதை எடுத்துக்கொண்டால் தான் தனக்கு சரியாகும் என்ற எண்ணத்திற்கு வந்து விடுகின்றனர். இதனால் உடல் ரீதியாக பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். எனவே சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, டாக்டரின் ஆலோசனை பெற்று மருந்து உட்கொள்ளுதல் நமது உடல் நலத்திற்கு நல்லது.

- -டாக்டர் பா.தீபன் நாயகம்உதவி பேராசிரியர், மருந்தியல் துறைஅரசு மருத்துவக் கல்லுாரிசிவகங்கை

எனது மகனுக்கு 17 வயது ஆகிறது.வெயில் காலம் துவங்கியதில் இருந்து அடிக்கடி வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிறார் இதைத் தவிர்ப்பது எப்படி சிகிச்சை முறை என்ன.

- -கற்பகவள்ளி, சாத்துார்

தண்ணீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும். கோடைக் காலத்தில் சுகாதாரமற்ற ஜூஸ், ஐஸ்கிரீம், பாஸ்ட் புட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கழிவறைக்கு சென்று வந்த பின்பு கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஈ மொய்த்த உணவுகளை உண்ணக்கூடாது. உணவை பாத்திரங்களால் மூடி வைக்க வேண்டும். வயிற்றுப்போக்கு சமயத்தில் ஓ.ஆர்.எஸ் எனும் உப்பு, சர்க்கரை கரைசலை நீரில் கலந்து அடிக்கடி பருக வேண்டும். சோர்வாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

- டாக்டர் முனியசாயி கேசவன்தலைமை மருத்துவர்அரசு மருத்துவமனைசாத்துார்






      Dinamalar
      Follow us