/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி உதவி மேலாளர் சஸ்பெண்ட்
/
அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி உதவி மேலாளர் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி உதவி மேலாளர் சஸ்பெண்ட்
அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி உதவி மேலாளர் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 10, 2025 03:03 AM

மதுரை: அரசு பஸ்சை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்த கோவை தாராபுரம் கிளை டிரைவர் கணேசனை செருப்பால் தாக்கிய பஸ் ஸ்டாண்ட் நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிரைவருக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 1:30 மணிக்கு கோவை தாராபுரத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையத்திற்கு அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டி வந்தார். ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு முன்புறமுள்ள வளைவில் (தண்ணீர்த்தொட்டி அருகே) பயணிகளை இறக்கி விட்டு திரும்பிய போது, அங்கு காத்திருந்த கோவை பயணிகளை பஸ்சை நிறுத்தி ஏற்றினார். பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு முன்பாகவே பஸ் நிறைந்து விட்டதால் அங்குள்ள பஸ் டெப்போ முன்பாக பஸ்சை நிறுத்திய கணேசன், நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க சென்றார்.
ஏற்கனவே இரண்டு அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் உடனடியாக தாராபுரம் கிளை பஸ்சை எடுக்க முடியாது என்று தெரிவித்த நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து, கணேசனிடம் இருந்த 'இன்வாய்ஸ்' ஆவணங்களை வாங்கிய படி 'உங்களுக்கு மெமோ தரவேண்டும்' என்றார்.
டிரைவருக்காக காத்திருந்த பயணிகள், 'தவறு டிரைவர் மேல் இல்லை' என தெரிவித்ததும் ஆத்திரமடைந்த மாரிமுத்து, கணேசனை தகாத வார்த்தைகளால் பேசியபடி செருப்பால் தாக்கினார். 'டிரைவரை அடிச்சுட்டாங்க' என கத்திக் கொண்டே டெப்போவுக்கு உள்ளே இருந்துவெளியே வந்த கணேசனை மீண்டும் மாரிமுத்து தாக்கினார். இதை கவனித்த பயணிகள், சக டிரைவர்கள் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
மாரிமுத்துவை மண்டல போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன் சஸ்பெண்ட் செய்தார். மாரிமுத்து மீது நடவடிக்கை கோரி நேற்று மதியம் போக்குவரத்து கழக 13 கிளைகளின் முன் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.