/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மீது தாக்குதல்
/
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 07, 2025 02:16 AM
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட அடிதடி தகராறில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது.
திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் 60. இவரது முதல் மனைவி பஞ்சவர்ணம் 56, குடும்ப பிரச்னை காரணமாக 21 ஆண்டுகளுக்கு முன்பிரிந்து சென்று விட்ட நிலையில் ராமலிங்கம் முத்துப்பேச்சி 54, என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார்.
ராமலிங்கத்திற்கு சொந்தமான 75 சென்ட் இடம் தொடர்பாக இரண்டு மனைவிகளுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரண்டு தரப்பினரும் நேற்று கரடிக்கல் கிராமத்தில் அடிதடியில் ஈடுபட்டனர்.
இதில் முத்துப்பேச்சியின் மகன் சுந்தரம், மருமகன் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் முதல் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இரவு 7:00 மணிக்கு பஞ்சவர்ணம், அவரது மகள் சுசீலா உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து ராஜ்குமார், சுந்தரம் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கியது. மேலும் மருத்துவமனையில் படுக்கைகள், ஸ்ட்ரச்சர் போன்ற பொருட்களையும் அடித்து நொறுக்கி தப்பியது.
இதில் சுந்தரம் தலையில் பலத்த காயம் அடைந்தார். தலைமறைவான கும்பலை போலீசார் தேடுகின்றனர்.