/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி
/
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 15, 2025 03:49 AM
மதுரை: மதுரையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல பாதுகாப்பு துணை கலெக்டர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு கூட்டுறவு கடன், 2 பேருக்கு செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். காது கேட்கும் கருவி கேட்ட சத்யாவுக்கு, விண்ணப்பம் அளித்த உடனே கருவி வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டு அலுவலர் வெங்கடசுப்ரமணியன் உடனிருந்தனர்.
* மத்திய இந்தியாவில் பழங்குடி இன அழிப்பு போரை நிறுத்த வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பினர்கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு பெண்கள் சங்க நிர்வாகிநிவேதா தலைமை வகித்து, மனு அளித்தனர்.
* தத்தனேரி இந்திரா நகர் செல்வி 39, என்பவர் மனு கொடுக்க வந்தார். நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அவரது வீட்டின் அருகேயுள்ள இடத்தை அருகில் வசிப்பவர் ஆக்கிரமித்தது குறித்து, நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன் அளித்த மனுவில், ''சோழவந்தான் பேரூராட்சி சார்பில் போக்குவரத்துக்கு இடையூறான குடிநீர் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனை முழுமையாக செயல்படுத்தாமல், குறிப்பிட்ட சில வீடுகளில் நடமாட முடியாத அளவுக்கு இருந்தும் தண்ணீர் தொட்டி அகற்றப்படாமலும் உள்ளது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் நடவடிக்கை தேவை'' என்று தெரிவித்துள்ளார்.

