/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர், ஆகாயத்தாமரைகளால் மாசடைந்த அயன்பாப்பாகுடி கண்மாய்: விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
/
கழிவுநீர், ஆகாயத்தாமரைகளால் மாசடைந்த அயன்பாப்பாகுடி கண்மாய்: விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
கழிவுநீர், ஆகாயத்தாமரைகளால் மாசடைந்த அயன்பாப்பாகுடி கண்மாய்: விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
கழிவுநீர், ஆகாயத்தாமரைகளால் மாசடைந்த அயன்பாப்பாகுடி கண்மாய்: விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு
ADDED : நவ 08, 2025 01:55 AM

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கண்மாய்க்குள் கழிவுநீர், ஆகாயத்தாமரைகள் சூழந்துள்ளதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. கண்மாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இக்கண்மாய் முலம் முன்பு 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. கண்மாய்க்குள் ஜெய்ஹிந்த்புரம், சோலைஅழகுபுரம், முத்துப்பட்டி, கோபால்நகர், வெள்ளக்கல், மீனாட்சிநகர் பகுதிகளின் கழிவுநீர் மட்டுமின்றி சாயக்கழிவு நீரும் கலக்கிறது. ஆண்டு முழுவதும் கழிவுநீர், ஆகாயத்தாமரை, சம்பை புற்களால் கண்மாய் சூழப்பட்டு இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக கழிவு நீரே இக்கண்மாயை ஆக்கிரமித்து உள்ளது. கருவேல மரங்களும் உள்ளன. இதனால் தண்ணீர் மாசடைந்து விவசாயத்திற்கு உகந்ததாக இல்லை. இத்தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்த போது நாற்றுக்கள் வெந்து கருகின. நிலங்களில் மண்வளம் முற்றிலும் கெட்டுவிட்டது. கண்மாய் மூலம் நடந்த விவசாயமும் முடங்கி விட்டது. கண்மாயை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பாதித்து கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீரின் தன்மையே மாறிவிட்டது. கண்மாயின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீர் கசிந்து ரோட்டில் செல்கிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: அவனியாபுரத்தில் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். முன்பு இக்கண்மாயில்தான் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க முடியாமல் அவதி அடைகின்றோம். மாடுபிடி வீரர்களும் நீச்சல் பயிற்சி பெற முடியவில்லை. இப்படி ஒரு கண்மாய் இருப்பதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியவில்லை. கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீர், சாயக்கழிவுநீரை தடுத்து ஆகாயத்தாமரைகளை அகற்றி, துார்வாரி கரைகளை பலப்படுத்தி ஆண்டு முழுவதும் மழை நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

