/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லஞ்ச வழக்கில் சார்பதிவாளருக்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
லஞ்ச வழக்கில் சார்பதிவாளருக்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச வழக்கில் சார்பதிவாளருக்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச வழக்கில் சார்பதிவாளருக்கு ஜாமின்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 20, 2024 07:21 AM

மதுரை : லஞ்ச வழக்கில் கைதான சிவகங்கை மாவட்ட சார்பதிவாளர் ஈஸ்வரனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. காளையார்கோவில் அருகே கோளந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம், 52. ராணுவத்தில் பணிபுரிந்தார்.
இவர், 2015ல் சிவகங்கை அருகே அல்லுார் பனங்காடி ரோடு பகுதியிலுள்ள 3 வீட்டு மனைகளுக்கு திருப்புத்துார் ரோட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்தார். அப்போது, தவறுதலாக 2 வீட்டு மனைகளுக்கு பதிவு செய்தார். மூன்றாவது மனைக்கு திருத்தப் பத்திரம் பதிவு செய்ய முயன்றார். இதற்காக அவர், சார்பதிவாளர்-1 அலுவலகத்தின் எதிரே உள்ள பத்திர எழுத்தர் கண்ணனை அணுகினார்.
அவர்,'திருத்தப் பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர் ஈஸ்வரனுக்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்,' என்றார். அற்புதம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.18 ஆயிரத்தை அற்புதத்திடம் கொடுத்து அனுப்பினர். பணத்தை பெற்ற கண்ணனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்படி, சார்பதிவாளர் ஈஸ்வரனையும் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.9,800 ஐ போலீசார் கைப்பற்றினர். ஈஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: புகார்தாரரிடமிருந்து மனுதாரர் பணம் எதுவும் பெறவில்லை. கைது நடவடிக்கையின்போது கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டை போலீசார் நிறுத்தி வைத்துவிட்டனர்.
பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர் குடும்பத்தினர் (மனைவி) பெயரில் உள்ள சொத்து விபரங்கள் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி: மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் 3 வாரங்கள் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.