/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கஸ்பா பட்டாணிக்கு தடை; மஞ்சள் பட்டாணிக்கு குறுகிய கால நீட்டிப்பா
/
கஸ்பா பட்டாணிக்கு தடை; மஞ்சள் பட்டாணிக்கு குறுகிய கால நீட்டிப்பா
கஸ்பா பட்டாணிக்கு தடை; மஞ்சள் பட்டாணிக்கு குறுகிய கால நீட்டிப்பா
கஸ்பா பட்டாணிக்கு தடை; மஞ்சள் பட்டாணிக்கு குறுகிய கால நீட்டிப்பா
ADDED : மே 18, 2025 03:10 AM
மதுரை : ஆஸ்திரேலியாவின் கஸ்பா பட்டாணிக்கு 2020 முதல் தற்போது வரை மத்திய அரசு இறக்குமதி அனுமதி தரவில்லை. அதேநேரம் மஞ்சள் நிற பட்டாணிக்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்குவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது சாத்தியமில்லை என்கின்றனர் உணவுப்பொருள் வியாபாரிகள், வர்த்தகர்கள்.
இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை பாதிக்கும் என்பதால் வெளிநாட்டு பட்டாணி வகைகளுக்கு 2020 முதல் 2023 வரை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாணியானது 15 சதவீத தேவையை மட்டுமே நிறைவேற்றுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்ததால் 2023 டிசம்பரில் மஞ்சள் பட்டாணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தொடர்ந்து 5 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு கடைசியாக 2025 மே 31 வரை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக காலநீட்டிப்பு செய்யாமல் 2026 மார்ச் வரை அவகாசம் வழங்க வேண்டும் என உணவுப்பொருள் வியாபாரிகள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், சாய் சுப்ரமணியம், வேல்சங்கர் கூறியதாவது:
வட இந்தியாவில் சென்னா எனப்படும் கொண்டைக்கடலை பயன்பாடு அதிகம். தமிழகம், கேரளா உட்பட தென் மாநிலங்களில் பட்டாணி முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப பயன்பாடும் மாறும் என்ற வித்தியாசத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 2023 முதல் தற்போது வரை 32 லட்சம் டன் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்துள்ளோம் என்றால் அதன் தேவையை கருத்தில் கொள்ள வேண்டும்.
3 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிப்பு வழங்கும் போது கப்பல்களில் இருந்து உடனடியாக ஆர்டர் பெற்று இறக்குமதி செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. உளுந்து, அவரைக்கு இறக்குமதி வரியின்றி மார்ச் 2026 வரை பெறுவதற்கு அனுமதி வழங்கியதைப் போல மஞ்சள் பட்டாணிக்கும் இதே கால அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும் 2020 முதல் தற்போது வரை ஆஸ்திரேலியன் கஸ்பா, டன் பட்டாணி வகைகளுக்கு இறக்குமதி அனுமதி வழங்கவில்லை. மஞ்சள் பட்டாணி, ஆஸ்திரேலியன் கஸ்பா பட்டாணி வகைகளுக்கு நீண்டகால இறக்குமதி அனுமதி அளித்தால் பட்டாணி விலை கட்டுக்குள் வந்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கும். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனர்.