ADDED : ஜூலை 14, 2025 02:33 AM
பேரையூர்: பேரையூர் அருகே சின்னப்பூலாம்பட்டி மாணிக்கம் பிள்ளை 60. விவசாயி. இவருக்கு அதே ஊரில் மூன்று ஏக்கரில் விவசாய தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் வாழை பயிரிட்டு 11 மாதங்கள் ஆனது.
கடந்த வாரம் சின்னபூலாம்பட்டி ஊராட்சியில் இருந்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஓடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் முனியாண்டி கோயில் ஓடையில் நாணல் அதிகமாக இருந்தது. அவற்றை சுத்தம் செய்யாமல் தீ வைத்தனர்.
இந்தத் தீ அருகில் இருந்த மாணிக்கம் பிள்ளையின் தோட்டத்திற்கும் பரவியது. இதில் அவருடைய 1.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த 2 ஆயிரம் வாழை மரங்கள் எரிந்து நாசமானது. அவர் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அவர்கள், 'எங்களால் இழப்பீடு தர முடியாது' என்று கைவிரித்து விட்டனர். ஒன்றிய அலுவலகத்திற்கு பலமுறை அலைந்தும் பி.டி.ஓ வை பார்க்க முடியாமல் அலுவலர்களிடம் மனு அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.