/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாழ்வான மின்கம்பியால் வாழ்விழக்கும் வாழைகள்
/
தாழ்வான மின்கம்பியால் வாழ்விழக்கும் வாழைகள்
ADDED : நவ 02, 2024 06:58 AM

மேலுார் : சருகுவலையபட்டியில் வாழை மரத்தில் மின்கம்பிகள் உரசுவதால் விவசாயிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சருகுவலையபட்டியில் இருந்து அய்யனார்புரம் செல்லும் மின்சப்ளையை பயன்படுத்தி காளியம்மாள், சங்கரமூர்த்தி, தனிக்கோடி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.
இப்பகுதியில் மின்கம்பங்களை மின்வாரியத்துறையினர் சரியாக பராமரிக்காததால் பல கம்பங்கள் சாய்ந்து பல வாழை மரங்கள் மீது உரசுகிறது. விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
விவசாயி காளியம்மாள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவு செய்து வாழைத் தார் அறுவடை செய்யும் நிலையில் மின்கம்பிகள் வாழை மரத்தின் மீது உரசுகிறது.
உயிருக்கு பயந்து தோட்டத்திற்குள் செல்ல பயமாக உள்ளது. வாழை மரங்களை முறையாக பராமரிக்க முடியவில்லை. கீழையூர் மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடவடிக்கை இல்லை. ஏற்கனவே இப் பகுதியில் ஒயர்மேனாக வேலை பார்த்தவர் (கோபி) அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்து போனது குறிப்பிடதக்கது. அதனால் உயிர்பலி ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாயும் மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும் சரி செய்ய வேண்டும் என்றார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரி செய்யப்படும் என்றனர்.

