/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெரிய திட்ட மதிப்பீட்டிற்கும் வங்கிக்கடன் பெறலாம்: நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் தகவல்
/
பெரிய திட்ட மதிப்பீட்டிற்கும் வங்கிக்கடன் பெறலாம்: நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் தகவல்
பெரிய திட்ட மதிப்பீட்டிற்கும் வங்கிக்கடன் பெறலாம்: நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் தகவல்
பெரிய திட்ட மதிப்பீட்டிற்கும் வங்கிக்கடன் பெறலாம்: நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் தகவல்
ADDED : டிச 23, 2025 07:17 AM

மதுரை: ''சிறிய தொழில்களுக்கு மட்டுமின்றி பெரிய தொழில்களுக்கும் பொதுத்துறை வங்கிகளின் வேளாண் வணிக கிளைகளை அணுகி கடன் பெறலாம்'' என நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.
மதுரை வாப்ஸ், இன்பினிட் சேவா, சீட்ஸ் சார்பில் மதுரையில் வேளாண் தொழில்முனைவோருக்கான வேளாண் தொழில்முனைவு கருத்தரங்கு நடந்தது. இன்பினிட் சேவா ஆலோசகர் மணிமாறன் வரவேற்றார். தலைவர் நளினி தலைமை வகித்தார். சி.ஐ.ஐ., எம்.எஸ்.எம்.இ., தென்மண்டல தலைவர் பொன்னுசாமி பேசுகையில், '' சிறிய அளவில் தொழில் செய்தாலும் முறையாக வரிகட்ட வேண்டும். சொன்ன நேரத்திற்கு பொருளை வாடிக்கையாளரிடம் சேர்க்க வேண்டும். தொழிலில் நாணயம் வேண்டும். 2020 ல் எளிதாக தொழில் செய்யும் 190 நாடுகளின் தரவரிசை பட்டியலில் 142 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது'' என்றார்.
வாப்ஸ் செயலாளர் அருள் பேசுகையில்,''வாப்ஸ் நிறுவனத்தின் மூலம் 3500 அறிவியல் பட்டதாரிகளுக்கு விவசாய தொழிற்பயிற்சி அளித்து ரூ.15 கோடி வரை வங்கி கடனுதவி பெற வழிகாட்டியுள்ளோம். உணவு பதப்படுத்ததுல், இயற்கை விவசாயம், இயற்கை இடுபொருட்கள், கால்நடை பொருளாதாரம் போன்ற துறைகளின் கீழ் இலவச பயிற்சி அளிக்கிறோம்'' என்றார்.
நபார்டு வங்கி பொதுமேலாளர் ஹரி கிருஷ்ணராஜ் பேசியதாவது: அந்தந்த மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும் தொழிற்திறன் பயிற்சி குறித்து விழிப்புணர்வு பெறவேண்டும். சிறியஅளவில் தொழில் செய்தாலும் தரமானதை கொடுத்தால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் வர்த்தகத்தையும் அதிகரிக்கலாம். மதுரையில் வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள நபார்டு வங்கியின் மாபிப் அலுவலகத்தில் தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு வழங்கும் அக்ரி பிசினஸ் அண்ட் அக்ரி கிளினிக் இலவச பயிற்சி பெற்றால் வங்கிக்கடன் பெற்று பெரிய திட்டங்களுக்கு செயல்வடிவம் தரமுடியும்.
இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் வேளாண் வணிக கிளைகளை அணுகினால் கூடுதல் கடன்தொகை கிடைக்கும். நபார்டு வங்கி இத்திட்டத்திற்கு தொடர்ந்து உதவுகிறது.
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.
விவசாயத்தைத் தாண்டி சந்தைப்படுத்துதலிலும் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். 'நாப்கிசான்' நிறுவனம் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறோம் என்றார்.
சிட்பி வங்கி சென்னை மண்டல பொதுமேலாளர் பிரவீன்குமார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் ஆர்கபிரபானந்தா, வேளாண் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

