/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூர் விவசாயிகளின் பெருங்கவலை: பருத்தியும், மக்காச்சோளமும் ஏமாற்றி விடுமோ * பராமரித்தும் வளர்ச்சி இல்லையே என வேதனை

ADDED : அக் 21, 2024 05:22 AM

பேரையூர்: பேரையூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் 15 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த பருத்திச் செடிகள் வளர்ச்சி இல்லாமல் இருப்பதைக் கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பணப் பயிர்களில் பருத்திக்கு முக்கிய இடம் உள்ளது. இந்திய பொருளாதாரம், தொழில்துறையின் ஆதிக்கம் செலுத்துவதாகவும் உள்ளது. ஏற்றுமதி துறையில் முக்கிய வர்த்தகம் கொடுக்கும் ஜவுளித் துறையின் மூலப் பொருளாகவும் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பருத்தி சாகுபடி அதிகம் உள்ளது.
பேரையூர் பகுதியில் கடந்த ஆடிப்பட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பருத்தி விதைக்கப்பட்டது . அப்போது பெய்த மழையில் பருத்திச் செடி நன்கு முளைத்திருந்தது. அடுத்து இரண்டு மாதங்கள் மழை இல்லாமல் வெயில் கொளுத்தியதால் முளையிலேயே பருத்திச் செடிகள் வாடி வதங்கி நின்றன.
தற்போது மழை பெய்தும் பருத்திச் செடிகள் வளர்ச்சி அடையவில்லை. நான்கு அடி வளர வேண்டிய பருத்திச் செடிகள் ஒரு அடியிலேயே பூப்பூத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். உழுதல், விதைத்தல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளை முறையாக செய்தும், செடி வளராததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
'இந்த செடிகள் மூலம் மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை' என தெரிவித்த அவர்கள், ''அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' எனவும் வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல் ஆறடி வளர வேண்டிய மக்காச்சோள பயிர்கள் இரண்டடியிலேயே பூத்துள்ளது. இதனாலும் இந்தாண்டு மகசூல் கிடைக்க வாய்ப்பு இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.