/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., வேலுார் இப்ராஹிம் கைது
/
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., வேலுார் இப்ராஹிம் கைது
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., வேலுார் இப்ராஹிம் கைது
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., வேலுார் இப்ராஹிம் கைது
ADDED : ஜன 26, 2025 04:41 AM

மதுரை : திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், முஸ்லிம்கள் எதிர்ப்பால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் மலை புனிதத்தை கெடுக்கும் வகையில் அங்குள்ள தர்காவில் ஆடு பலியிட முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், தர்காவில் வழிபட தடையில்லை என்பதால் பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் மலைக்கு வந்து சென்றனர். தர்கா, வக்பு வாரியத்தின்கீழ் உள்ளதால் அதன் தலைவர் நவாஸ்கனி எம்.பி., உறுப்பினர் அப்துல்சமது எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தனர்.
நவாஸ்கனியுடன் வந்தவர்கள் மலை படிக்கட்டுகளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. நவாஸ்கனி குறித்து வேலுார் இப்ராஹிம் கடும் விமர்சனம் செய்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் செல்ல மதுரை வந்தார்.
முன்னதாக ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கிருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்டவரை போலீசார் தடுத்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அங்கு செல்லக்கூடாது என்றனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்து புறப்பட்ட வேலுார் இப்ராஹிமை கைது செய்தனர். தடுத்த பா.ஜ.,வினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைதை கண்டித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் முன் பா.ஜ.,வினர் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். கைதுக்கு அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீசார் கூறுகையில், ''நவாஸ்கனி குறித்து வேலுார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்தார்.
அவரை திருப்பரங்குன்றத்திற்கு வர விடமாட்டோம் என நவாஸ்கனி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதி கைது செய்தோம்'' என்றனர்.