ADDED : ஜூலை 15, 2025 03:55 AM
மதுரை: தமிழக அளவில் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை, மாநில அரசு தணிக்கைத் துறையினர் நேற்று கறுப்பு பட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம் நடத்தினர்.
தமிழக நிதித்துறையின் கீழ் செயல்படும் இத்துறைகளில் அவசர அவசியம் கருதி எடுக்கும் விடுப்புகளுக்குக்கூட ஒப்புதல் அளிப்பதில்லை. பணியமர்த்திய இடங்களில் பணியாற்ற அனுமதிப்பதில்லை. வேளாண் விரிவாக்க மைய தணிக்கைகளுக்கு போதிய ஆட்கள் வழங்குவதில்லை என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.
உள்ளாட்சி நிதித்தணிக்கை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பாபு கூறுகையில், ''இத்துறையில் 'கேம்ஸ்' எனும் ஆன்லைன் தணிக்கை முறையை முழுஅளவில் மேம்படுத்தாமலும், தணிக்கை நடைமுறையை முழுமையாக உள்ளீடு செய்யாமலும் அவசர கதியில் அமல்படுத்தியதால் இடர்பாடுகளை சந்திக்கிறோம். இதுபோன்றவற்றுக்கு காரணமான தலைமை தணிக்கை இயக்குனரை கண்டித்தும் பலர் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்'' என்றார்.