/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரத்தத்தின் ரத்தமே... மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய தயங்காதீங்க
/
ரத்தத்தின் ரத்தமே... மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய தயங்காதீங்க
ரத்தத்தின் ரத்தமே... மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய தயங்காதீங்க
ரத்தத்தின் ரத்தமே... மதுரை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய தயங்காதீங்க
ADDED : ஏப் 22, 2025 06:20 AM

மதுரை: மதுரையில் கல்லுாரிகளில் செமஸ்டர் விடுமுறை என்பதால் மாணவர்களிடம் இருந்து ரத்ததானம் பெற முடியாத நிலையில் குடியிருப்போர் நலச்சங்கம், தொண்டு நிறுவனம், பிற சங்கங்கள் ரத்ததானம் தர முன்வர வேண்டும்.
2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மதுரை அரசு மருத்துவமனையில் 208 முகாம்கள் நடத்தப்பட்டு 30ஆயிரத்து 47 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி கல்லுாரிகளில் நடத்தப்பட்ட முகாம் தான் என்கிறார் ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா.
அவர் கூறியதாவது: கல்லுாரிகளைத் தாண்டி பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் முகாம் நடத்துகிறோம். வழக்கமாக மே, ஜூனில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும். தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலை, சிட்கோ, ஐ.டி., மில்கள், ஜவுளிக்கடைகள், ரசிகர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் இருந்து ரத்ததானம் கேட்டுள்ளோம். தற்போது 1050 யூனிட் ரத்தம் இருப்புள்ளது. மே மாதம் ரத்தம் பற்றாக்குறை ஏற்படும். மகப்பேறு, புற்றுநோய், விபத்து காயங்கள் என நோயாளிகளுக்கு தினமும் 150 யூனிட் ரத்தம் தேவைப்படும்.
தட்டணுக்கள் தானம் தேவை
ரத்தத்தில் இருந்து தட்டணுக்களை மட்டும் பிரித்து மீண்டும் ரத்தத்தை கொடையாளரிடம் வழங்கும் இயந்திரம் மருத்துவமனையில் உள்ளது. அரைமணி நேரத்தில் 350 மில்லி அளவுக்கு தட்டணுக்களை மட்டும் பிரித்து தானமாக பெறுகிறோம். தானம் வழங்கியவர்களுக்கு 48 மணி நேரத்தில் தட்டணுக்கள் உற்பத்தியாகி விடும். ரத்தசோகை நோயாளிகளுக்கு இந்த முறையில் ரத்தகொடையாளர்கள் உதவலாம். சங்கங்கள் மட்டுமின்றி நண்பர்கள் குழுவாக இணைந்தும் முகாமிற்கு ஏற்பாடு செய்தால் ரத்ததானம் பெற தயாராக உள்ளோம். அடுத்த இரு மாதங்களுக்கு பற்றாக்குறையில்லாமல் நோயாளிகளை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்றார். முகாம் அமைக்க 82489 23925, 94438 30163ல் அழைக்கலாம்.