
காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று வந்தோம். பகல்ஹாம் என்ற இடம் சமவெளி சொர்க்கம் எனலாம்; எங்கும் பச்சைப்பட்டு விரித்தது போன்ற தோற்றம். எந்த இடத்தில் நின்று கொண்டு சுற்றிப்பார்தாலும் பனி படர்ந்த மலை நம் கண்களை கொள்ளை கொள்ளும். அந்த இடத்திற்கு போகும் வழியெங்கும் சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று பாரதி பாடிய சிந்து நதியின் எழிலை பார்த்தபடியே செல்லலாம்.
டூரில் மனதை கொள்ளை கொண்டது குல்மார்க்தான், நாங்கள் போயிருந்த போதுதான் பனிப்பொழிவு ஆரம்பித்த நிலை, அப்போதே எதிரே நிற்பவர்கள் தெரியாத அளவிற்கு பனி மழை பொழிந்தது, அது ஒரு ஆனந்த அனுபவம், அந்த அனுபவத்தை நேரில் மட்டுமே உணரமுடியும், உணரவேண்டும். குல்மார்க்கில் பனித்துகள்கள் நாற்காலிகள் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன.
இந்த பனியை நடந்து சென்றும் விதவிதமான வாகனங்களில் சென்றும் கொண்டாடலாம். எல்லாம் உங்கள் மனம், பணத்தைப் பொறுத்தது. கொதிக்க வைத்த டீயை சட்டியில் இருந்து எடுத்து டம்ளரில் ஊற்றி ஒரு மடக்கு குடிப்பதற்குள் அந்த டீ ஆறிவிடும். நாம் கடைகளுக்கு செல்லும் போது மினரல் வாட்டர் வாங்கும் போது 'ப்ரிட்ஜ்ல இருந்து ஜில்லுனு எடுத்துக் கொடுங்க' என்று கேட்டு குடிப்போம். ஆனால் இங்கே திறந்த வெளியில் வைத்திருக்கும் மினரல் வாட்டரே உறைந்த நிலையில்தான் இருக்கும் என்பதால் எல்லோரும் வார்ம் வாட்டர் என்று கேட்டு வாங்கி குடிக்கின்றனர். எப்போதும் சூடாக இருக்கும் அடுப்பின் அருகே இந்த வாட்டர் பாட்டிலை வைத்திருப்பர்.
இங்கு காவா என்று டீ போல ஒரு பானம் மிகவும் பிரசித்தம். ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ என்று ஏராளமான காஷ்மீர் மசாலா பொருட்களைப் கலந்து கொடுக்கின்றனர். முப்பது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை வாங்குகின்றனர். போனதற்கு குடித்துவிட்டு வரலாமே தவிர அதன் ரெசிபி தெரிந்து கொண்டு இங்கு வந்து கடை போடுமளவிற்கு இந்த காவா பானம் 'ஒர்த்' இல்லை.
ரூமைவிட்டு கிளம்பும் போது உடலை எப்போதும் சூடாக வைத்திருக்கும் உடலோடு ஒட்டிய தெர்மல் வேர், அதன்மீது கனமான ஜீன்ஸ் சட்டை அதன் மீது ஒரு ஸ்வெட்டர் பின் மைனஸ் நான்கு டிகிரி வரை தாங்கும் ஜெர்கின், ப்ரோ போகஸ் பிராண்டு கையுறை, மங்கி கேப், கழுத்தைச் சுற்றி மப்ளர் என்று இரண்டு சுற்று பெருத்த உடம்போடுதான் கிளம்ப வேண்டும். ஆனால் இவ்வளவு இருந்தும் சரிப்பட்டு வராது என்று குல்மார்க் மலை அடிவாரத்தில் முன்னுாறு ரூபாய் வாடகையாக வாங்கிக் கொண்டு, ரோடு போடுபவர்கள் போடக்கூடிய நீளமான காலணியும், கிட்டத்தட்ட ரப்பர் போன்ற ஓவர் கோட்டும் கொடுக்கின்றனர்.
இத்தனையையும் போட்டுக் கொண்டு போயிருந்தும் கூட குல்மார்க்கில் பைக்குள் விட்ட கையை எடுக்கவோ, பூட்டியிருந்த வேனைவிட்டு இறங்கவோ மனம் வரவில்லை. அவ்வளவு குளிர், ஆனால் அந்த குளிரில் நமது ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய கையோடு வானமே கூரையாக, பெய்யும் அனைத்து பனியையும் தங்கள் தலையில் வாங்கிக் கொண்டு பத்து மணி நேரம் நம்மைக் காக்க நாட்டைக்காக்க எல்லை தெய்வங்களாக காவல் காத்தபடி நிற்கின்றனர். கைகளை விறைப்பாக்கிக்கொண்டு அவர்களைப் பார்த்து ஜெய்ஹிந்த் என்று சல்யூட் செய்தேன். என் பயணத்தின் அதிகம் மகிழ்ந்த நெகிழ்ந்த தருணமது.
ஒரு சின்ன மரத்தில் ஆங்காங்கே பனிக்கு பதிலாக பஞ்சை தொங்கவிட்ட கிறிஸ்துமஸ் மரத்தையே பார்த்திருந்த கண்களுக்கு இப்படி ஆயிரக்கணக்கான பனி சூழ்ந்த மரங்களைப் பார்த்தது கேமராவிற்கு விருந்துதான். காஷ்மீர் நகர் என்பது சுற்றிச்சுற்றி தால் ஏரியைச் சுற்றிதான் அமைந்துள்ளது. இந்த தால் ஏரியில்தான் மிதக்கும் காய்கறி பூ வியாபாரம் நடக்கிறது. காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் இந்த மிதக்கும் சந்தையும் பார்க்க வேண்டிய இடம்தான்.
எல்லா மாதங்களிலுமே காஷ்மீர் செல்லலாம் என்றாலும் நவம்பர், இலையுதிர்காலத்தின் முடிவும் பனி பெய்யும் காலத்தின் ஆரம்பமும் என்பதால் இரண்டையுமே ரசிக்க முடியும்.
இந்தியாவில் விற்கப்படும் ஆப்பிள்களில் 75 வீதம் இங்கு விளையும் ஆப்பிள்கள்தான். ஒரு வாளியைக் கொடுத்து உங்களுக்கு பிடித்த ஆப்பிள்களை பறித்துக் கொண்டு வாருங்கள் என்றனர் ஒரு வாளி நிறைய பறித்துக் கொண்டு வந்தேன்; எடை போட்டுப்பார்த்துவிட்டு நுாறு ரூபாய் கொடுங்கள் என்றனர். இந்த ஆப்பிள்கள் பலர் கைமாறி இங்கே வரும் போது விலை எகிறிவிடுகிறது. இதன் சுவையும் வேறு லெவல்.
இதயக்கனி படத்தில் காஷ்மீர் என்ற பாடலில் ஒரு வரி வரும். 'வயிற்றினில் நெருப்பை கட்டிக்கொண்டார் என்ற பழமொழி இவர்தான் படைத்தாரோ' என்று. அதற்கேற்ப இடுப்பைச்சுற்றி மிதமான சூட்டைத்தரும் சட்டியை கட்டியுள்ளனர். காஷ்மீரை மையமாக வைத்து ஆயிரக்கணக்கான சினிமாக்கள் வந்த நிலையில் காஷ்மீரில் சினிமா தியேட்டர் கிடையாது. இதனால் அங்கு யாருக்கும் வருத்தமும் கிடையாது; ஆனால் இடம் நேரம் காலம் எதுவும் பார்க்காமல் புகைத்தபடியே இருக்கின்றனர். பொதுவாக இங்குள்ளவர்களின் நிறம், உயரம், உடை காரணமாக அனைவருமே அழகாக இருக்கின்றனர்.
காஷ்மீரில் கண்ட இடத்தில் கேமராவை எடுக்காதீர்கள்; சுட்டுவிடுவார்கள் என்று சிலர் ரொம்பவே மிரட்டி அனுப்பினர். ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் இல்லை, நாம் வாழ்வது சுற்றுலாவால்தான் என்பதை உணர்ந்திருக்கின்றனர், எல்லை தாண்டாதவரை மிகவும் அன்பாகவும் பாசமாகவும்தான் பழகுகின்றனர். ஒரு முறை நேரில் போய் பழகித்தான் பாருங்களேன்.