ADDED : மே 04, 2025 04:00 AM

மேலுார் : மேலுாரில் காலை உணவுத் திட்ட வளாகத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் சமூக விரோத செயல்களின் புகலிடமாக மாறி வருகிறது.
மேலுார் நகராட்சி அலுவலகம் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடம் ரூ.27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து மேலுார், கருத்தபுளியம்பட்டி உள்ளிட்ட மூன்று பள்ளிகளில் படிக்கும் 350-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு சமைத்து அனுப்பி வைக்கின்றனர்.
இவ்விடத்திற்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர்.
போதையில் அரை நிர்வாணத்தில், ஆபாச வார்த்தைகள் பேசி திரிவதால் அவ்வழியே நடந்து செல்லும் பெண்கள் முகம் சுளிக்கின்றனர்.
பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். அவை பணியாளர்கள் காலில் குத்தி காயமேற்படுகிறது. மற்றொரு பகுதியில் சுத்தமில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைவில் காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''காம்பவுண்ட் சுவர் கட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் கட்டப்படும் என்றார்.

