
இந்த ஆண்டிற்கான கருப் பொருள் என்னவென்றால் 'சுவாசிக்க முடியவில்லை, சி.ஓ.பி.டி.,'யை நினைத்துக் கொள்ளுங்கள்' என்பது தான்.
சி.ஓ.பி.டி., நோயில் நுரையீரலில் காற்று உள்ளே நுழையும், வெளியேறும் பாதைகளில் தடை ஏற்படுகிறது. இதுவே சுவாசிப்பதை கடினமாக்கி நுரையீரலின் செயல்பாட்டை குறைக்கிறது. மூச்சுக்குழாயில் அழற்சி, நுரையீரலில் காற்றின் பரிமாற்றம் குறைவு என இருவகையாக இந்நோய் காணப்படுகிறது.
நோய் அறிகுறிகள் மூச்சுதிணறல், தொடர் இருமல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம், உடல் சோர்வு ஏற்படும்.
நீண்டகாலம் புகையிலை, சிகரெட், பீடி புகைப்பதால் இந்நோய் வரும். உலகளவில் சிகரெட் பயன்பாடு குறைந்து கொண்டே இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாக கல்லுாரி மாணவர்களிடையே புகைப்பழக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்கள் மட்டுமின்றி அருகில் நின்று சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனப்பெருக்கத்தினால் ஏற்படும் காற்று மாசுபாடும் ஒரு முக்கிய காரணம்.
பல தொழிற்சாலைகளிலிருந்து வரும் ரசாயனம் கலந்த புகை காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் நிமோனியா அல்லது காசநோய் தொற்று ஏற்பட்டிருந்தால் நுரையீரல் வளர்ச்சியைப் பாதித்து சி.ஓ.பி.டி., உருவாக வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெறாவிட்டாலும் இந்நோய் வரலாம்.
சிகரெட்டில் உள்ள புகையிலை, இதர ரசாயன நச்சு பொருட்கள், தொற்றுகளுக்கு எதிராக நுரையீரலை பலவீனப்படுத்தி, சுவாசிக்கும் காற்று நுரையீரல் உள்ளே செல்லும் பாதையை சுருக்குகிறது.
நுரையீரல் குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்தி காற்றுப்பைகளை சேதப்படுத்தி அழிக்கிறது. புகை பிடிப்பதால் வீட்டில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
சிகிச்சை முறை எளிய முறையில் 'இன்ஹேலர்' பயன்படுத்தலாம். 'ப்ராங்கோடைலேட்டர்ஸ்' மருந்துகள் காற்றுப்பாதைகளைத் தளர்த்தி சுவாசிப்பதை எளிதாக்கும். 'ட்ரிபிள் தெரபி' என்பது மூன்று மருந்துகளை இணைத்து ஒரு உள்ளிழுக்கும் சிகிச்சை ஆகும்.
வாழ்க்கை முறை மாற்றம் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், கைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் நுரையீரலுக்கு நல்லது. உடல்பருமன் உள்ளவர்களுக்கு சி.ஓ.பி.டி., ஆஸ்துமா தாக்கம் வரும் வாய்ப்பு உள்ளது. சரியான எடையை பராமரிக்க உதவும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் பற்றி அறிந்து கொண்டால் சுவாச மண்டல அழுத்தம் குறைந்து சீரான சுவாசம் பெறலாம்.
-டாக்டர் மா.பழனியப்பன்
நுரையீரல் சிறப்பு நிபுணர்
மதுரை
அலைபேசி: 94425 24147

