ADDED : ஜன 01, 2025 06:32 AM
மதுரை : மதுரை பழங்காநத்தம் பாலத்தில் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கான பிரிவில் மேல்தளம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஓரிரு மாதங்களில் பாலம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
மதுரை பழங்காநத்தம் - டி.வி.எஸ்.,நகர் இடையே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரோட்டில் ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தின் கிழக்கு பகுதியில் 300 மீட்டர் நீளத்திற்கு ஒரு பிரிவு கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. இதற்காக பிரதான பாலத்தில் இருந்து அமைக்கப்படும் பிரிவு பாலத்தில் 12 துாண்கள் அமைக்கப்பட்டன.
அத்துாண்களை இணைக்கும் வகையில் மேல்தளம் அமைக்கும் பணிகள் நடந்தன. கான்கிரீட் மேல்தளம் அமைப்பதற்காக, பாலத்திற்கு கீழ் செல்லும் அண்டர் பாஸ் ரோட்டில் இரும்புச் சாரங்களால் முட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. எனவே இந்த ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள் பாலத்தின் மேல் சென்று வந்தன.
இந்நிலையில் பிரிவு பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணிகள் விரைவாக முடிவடைந்துள்ளன. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சிறுசிறு பணிகள் பாக்கி உள்ளன. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில் பணிகளை பொறியாளர்கள் செய்து வருகின்றனர்.
உதவி கோட்ட பொறியாளர் குட்டியான் கூறுகையில், 'பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. மேல்தளம் கான்கிரீட் பணிகள் சிலநாட்கள் முன்பு நடந்தது. ஒரு மாதத்திற்கு பின் முட்டுக்கம்பிகள் பிரிக்கப்படும். தற்போது இந்த பிரிவு பாலத்தின் கீழ் வடிகால் பகுதி, சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்'' என்றார்.