ADDED : அக் 15, 2024 05:31 AM

மதுரை: மதுரையில் பெய்த மழையால் வைகையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு, மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மதுரையின் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மேம்பால பணிகள் ரூ.176 கோடி மதிப்பில் நடக்கின்றன. தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையும், இதில் ஒரு பிரிவு செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு வரை என 3 கி.மீ., தொலைவுக்கு பாலம் அமைகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்தன.
வைகை ஆற்றில் ஏ.வி., பாலத்தை ஒட்டியே மற்றொரு பாலம் அமைப்பதற்காக மீனாட்சி கல்லுாரி அருகே பாலப் பணிகள் நடந்தன. தொடர்ந்து ஆற்றுக்குள் 300 மீட்டருக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 14 துாண்கள் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக 2 இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. இந்தத் துாண்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அவற்றின் கீழ் 98 பைல்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பணிகள் முடங்கின. இப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கே.ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமார் பார்வையிட்டனர். பணிகள் செய்வதற்கான உபகரணங்கள், பொருட்களை கரையோரம் எடுத்துச் செல்ல உத்தரவிட்டனர். அதிகாரிகள் கூறுகையில், ''தண்ணீர் வரத்து நின்றஉடன் பணிகள் தொடரும்'' என்றனர்.