/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடுகளைப் போல வலுவிழந்து மதுரை பயணிகளை பயமுறுத்தும் பாலங்கள்: நொறுங்கி சேதமடைந்தும் பராமரிப்பில்லாத அவலம்
/
ரோடுகளைப் போல வலுவிழந்து மதுரை பயணிகளை பயமுறுத்தும் பாலங்கள்: நொறுங்கி சேதமடைந்தும் பராமரிப்பில்லாத அவலம்
ரோடுகளைப் போல வலுவிழந்து மதுரை பயணிகளை பயமுறுத்தும் பாலங்கள்: நொறுங்கி சேதமடைந்தும் பராமரிப்பில்லாத அவலம்
ரோடுகளைப் போல வலுவிழந்து மதுரை பயணிகளை பயமுறுத்தும் பாலங்கள்: நொறுங்கி சேதமடைந்தும் பராமரிப்பில்லாத அவலம்
ADDED : ஜன 17, 2025 05:35 AM

மதுரை: மதுரையில் ரோடுகளுக்கு இணையாக பாலங்களும் வலுவிழந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மதுரையின் முக்கிய, பிரதான ரோடுகளில் எல்லா பகுதியிலும் தரைப்பாலங்கள், மேம்பாலங்கள் உள்ளன. இவை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் கண்காணிப்பு, பராமரிப்பில் உள்ளன. பல இடங்களில் இவற்றை கண்டு கொள்ளாததால் இதன்மீது பயணிப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
குலமங்கலம் மெயின் ரோட்டில் மீனாம்பாள்புரம் ஆலமரம் அருகே பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் ஒருபக்கம் லாரிகள், குப்பை தொட்டிகளால் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பாலத்தின் அகலம் சுருங்கி 'நெருக்கடி நேரங்க'ளில் பிரச்னை ஏற்படுகிறது.
பாலத்தின் மறுபக்கம் நடைபாதையில் இருந்து ரோடு ஒரு அடிக்கு இறங்கியுள்ளதால் டூவீலரில் செல்வோர் இரவில் விபத்தில் சிக்குகின்றனர். பாலம் வலுவிழந்து காணப்படுவதால் அதன்மீது கனரக வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
மற்றொருபுறம் பந்தல்குடி - கான்சாபுரம் ரோடுகளை இணைக்கும் பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் உடைந்து, நொறுங்கி தொங்குகிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. எந்நேரமும் இடிந்து விழ வாய்ப்புள்ளதால் அங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும்.
தடதடக்கும் பாலம்
தேனி மெயின் ரோட்டில் உள்ள புதுமேம்பாலத்தின் மேல்தளம் இணைப்புகளில் சரியான பூச்சு இல்லாததால், சிறிய அளவில் பள்ளமாக உள்ளது. வாகனங்கள் இதில் தடதடத்தபடி செல்கின்றன. இதேபோல காளவாசல் பைபாஸ் ரோடு மேம்பாலத்தில் மேல்தளம் பொருந்தும் பகுதியில் இரும்பு தகடுகள் தடதடக்கின்றன.
இதே பைபாஸ் ரோட்டில் போடி ரயில்வே லைன் மேம்பாலத்தில் தார்ரோடு சீரற்ற நிலையில் உள்ளது. இருபுறமும் மணலும் குவிந்துள்ளது. தெற்கு வாசல் பாலத்தின் இருபுறமும் கைப்பிடிச் சுவர்களின் நிலையை பார்ப்போருக்கு எந்நேரமும் இடிந்து விழுமோ என்ற அளவு சேதமடைந்துள்ளது. சில பாலங்களில் மரக்கன்றுகளும் வளர்ந்துள்ளன.
எல்லா பாலங்களின் இருபுறமும் நான்கைந்து வேகத்தடைகளை அமைத்துள்ளதால் டூவீலர்கள் தடதடத்து விபத்தை சந்திக்கும் நிலையும் உள்ளது. இதில் வாகனங்களின் வேகத்தை குறைக்க ஒரு வேகத்தடை அமைக்கலாம். இதுபோன்ற குறைகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலங்களின் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.