/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்டுங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
/
வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்டுங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்டுங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்டுங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
ADDED : டிச 20, 2025 05:10 AM

மதுரை: 'வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்ட வேண்டும்' என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளாவன:
மலைச்சாமி, செல்வராஜ், மாங்குளம்: முல்லைப்பெரியாறு கால்வாயின் 3வது மடையில் உடைப்பு கண்மாய் மறுகால் செல்லும் ஓடையை துார்வார வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தோம். திட்ட மதிப்பீடு தயார் என நீர்வளத்துறையினர் சொல்கிறார்களே தவிர செய்யவில்லை. இந்தாண்டும் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு 150 ஏக்கரிலுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உடைப்பு கண்மாயில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிலுள்ள வயலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன், உசிலம்பட்டி: 58 கிராம கால்வாயில் கிளை வாய்க்காலை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதை அகற்ற வேண்டும்.
பழனிசாமி, கொட்டாம்பட்டி: மாநில அளவில் தென்னை பண்ணை இருப்பது போல மதுரையில் தென்னைக்கான பண்ணை அமைத்து தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து தரவேண்டும்.
ராமன், நடுமுதலைக்குளம்: செல்லம்பட்டி அருகே திருமங்கலம் 4ம் எண் பாசனக்கால்வாய், செல்லம்பட்டி முதல் கரிசல்பட்டி வரை 4 கி.மீ., துாரம் வரை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
மாரிச்சாமி, மாடக்குளம்: பழங்காநத்தம் நெல் உலர்களத்தில் மாநகராட்சி கட்டட இடிபாடுகளை கொட்டி வைத்துள்ளது. அதை அகற்றி விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
அழகுசேர்வை, பனையூர்: பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் தலா ரூ.ஆயிரம் வரை பிரீமியத்தொகை செலுத்துகிறோம். ஆனால் இழப்பீடாக குறைந்த அளவே தருகின்றனர். எந்த அடிப்படையில் இழப்பீடு தரப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தனிநபர் பயிர் காப்பீட்டை கொண்டுவர வேண்டும்.
குருநாதன், மதுரை: மழைக்காலத்தில் கிடைக்கும் உபரிநீரைத் தேக்கும் வகையில் வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்ட வேண்டும். அதை வைகையாற்றிலும் விடலாம். விவசாயப் பயன்பாட்டுக்கும் உதவும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
கலெக்டர் பேசியதாவது: உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாயில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. அதை ஆர்.டி.ஓ., தாசில்தார் உறுதிப்படுத்த வேண்டும். மேலுார் பூஞ்சுத்தி தோட்டக்கலைத்துறை பண்ணையில் தென்னங்கன்று உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும். வைகை அணைக்கு கீழே இன்னொரு அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும். தென்னை விவசாயிகளுக்கு கேரளாவில் சாகுபடி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

