/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடக்க பாய்ந்த காளையரும், தெறிக்கவிட்ட காளைகளும்! ஏறுகளும், இளைஞர்களும் பாய்ந்தாடிய பாலமேடு ஜல்லிக்கட்டு
/
அடக்க பாய்ந்த காளையரும், தெறிக்கவிட்ட காளைகளும்! ஏறுகளும், இளைஞர்களும் பாய்ந்தாடிய பாலமேடு ஜல்லிக்கட்டு
அடக்க பாய்ந்த காளையரும், தெறிக்கவிட்ட காளைகளும்! ஏறுகளும், இளைஞர்களும் பாய்ந்தாடிய பாலமேடு ஜல்லிக்கட்டு
அடக்க பாய்ந்த காளையரும், தெறிக்கவிட்ட காளைகளும்! ஏறுகளும், இளைஞர்களும் பாய்ந்தாடிய பாலமேடு ஜல்லிக்கட்டு
ADDED : ஜன 15, 2025 11:45 PM

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது.
அதிகாலை 4:00 மணி முதலே காளைகளும், மாடுபிடி வீரர்களும் வந்தனர். வீரர்கள், காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். காலை 7:40க்கு அமைச்சர் மூர்த்தி போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அமைச்சர் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, எம்.பி.க்கள் தங்கத்தமிழ்ச் செல்வன், வெங்கடேசன், எம்.எல்.ஏ., க்கள் பூமிநாதன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் 4,820 காளைகள், 1,914 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். முதலில் பாலமேடு கிராம கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பின், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் போட்டி நடந்தது. 5ம் சுற்று நிலவரப்படி களம் கண்ட 508 மாடுகளில் 98 மாடுகள் பிடிபட்டன. 250 காளையர்கள் களமாடினர்.
ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடியவர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டவிழ்த்து விடப்பட்டதும் வாடிவாசல் வழியாக காளைகள் துள்ளிப் பாய்ந்து வந்தன. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. வீரர்களை, 'வந்து பார்' எனும்விதமாக உடலை சிலுப்பியபடி, கால்களை தரையில் கோதியபடி மிரட்டின.
திமிலை பிடிக்க பாய்ந்த வீரர்களை, முட்டிமோதி அந்தரத்தில் பறக்கவிட்டன.
இக்காட்சியை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். அத்தனை களேபரத்திலும் அச்சமின்றி களத்தில் நின்ற சில வீரர்கள், காளைகளின் திமிலைப் பிடித்து தொங்கியபடி காளைகளை அடக்கி பாராட்டு பெற்றனர்.
இதில் 20 வீரர்கள் உட்பட 51 பேர் காயமடைந்தனர். அவர்களில், ஏழு பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு சுற்றிலும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம், சைக்கிள் முதல் அண்டா, பட்டுப் புடவை, டிவி, மிக்சி வரை ஏராளமான பரிசுகளுடன், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
போட்டியின் நடுவே அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'சேவ் அரிட்டாபட்டி' என எழுதியிருந்த பதாகைகளை சிலர் காண்பித்தனர்.
மாட்டின் உரிமையாளர் ஒருவர் தன் மாடு களமிறங்கிய போது அதன் மீது விபூதி வீசியதால் கலெக்டர் சங்கீதா உத்தரவில் அவரை போலீசார் பிடித்துச் சென்றனர்.
சிறந்த வீரருக்கு கார் பரிசு
ஜல்லிக்கட்டில் மொத்தம் 10 சுற்றுகளில் 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 14 காளைகளை அடக்கிய, நத்தம் பார்த்திபன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வென்றார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில், கார் பரிசு வழங்கப்பட்டது.
மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகளை அடக்கி 2ம் இடம் பெற்றார். அவருக்கு மோட்டார் பைக் பரிசு வழங்கப்பட்டது.
பொதும்பு பிரபாகரன், 11 காளைகளை அடக்கி 3ம் இடம் பெற்றார். அவருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கப்பாண்டியின் காளை தேர்வு செய்யப்பட்டது. முதல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் சார்பில், டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது.
சின்னப்பட்டி கார்த்திக் காளைக்கு 2ம் பரிசாக கன்றுடன் கறவை மாடும், குருவித்துறை பவித்ரன் காளைக்கு 3ம் பரிசாக விவசாய ரோட்டோ வேட்டர் கருவியும் பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசுகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கினர்.
இதற்கிடையே, அவனியாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி யில், படுகாயம் அடைந்து உயிரிழந்த நவீன் குமாருக்கு, ௩ லட்சம் ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நண்பர்கள் கொடுத்த ஊக்கம்
சிறந்த வீரராக தேர்வான நத்தம் பார்த்திபன் கூறியதாவது:
இதுவரை நிறைய வடமாடு மஞ்சு விரட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இப்போது முதன்முறையாக பாலமேடு ஜல்லிக்கட்டில் களமிறங்கி முதல்பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டதால் நான் படிக்கவில்லை. கூலிவேலை செய்கிறேன். என்னிடம் திறமை இருப்பதாக அறிந்து நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால் இவ்வெற்றியை பெற்றுள்ளேன்.
முன்பு கார், இன்று டிராக்டர்
மாடு உரிமையாளர் சத்திரப்பட்டி விஜயதங்கபாண்டியன் கூறியதாவது:
நாங்கள் பாண்டியன் பிரதர்ஸ் என்ற பெயரில் மாடுகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்கிறோம். இதற்கு முன்னதாக 2023 ல் சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் கார் பரிசு பெற்றோர். இப்போது டிராக்டர் பரிசு பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.