ADDED : செப் 10, 2026 07:14 PM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி மின்மயான பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குப்பையை சேகரித்து உரமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பையைத் தரம்பிரித்து உரம் தயாரிக்கும் அளவை விட, குப்பை அதிகம் சேர்வதால் அடிக்கடி தீ வைத்து எரித்து வந்தனர்.
குப்பையில் தீ வைப்பதால் கிளம்பும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. சில மாதங்களுக்கு முன் அப்பகுதி மக்கள், குப்பை கொண்டு வந்த வாகனங்களை் தடுத்து போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி சப் கலெக்டர் உத்கர்ஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குப்பைக் கிடங்கு பகுதியை வேலி போட்டு பராமரிக்கவும், குப்பையில் தீ வைப்பது யார் என்பதை கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும் என, என சமரசம் செய்தனர். சில மாதங்களாக குப்பையில் தீ பரவாமல் கண்காணித்தனர். ஆனால் நேற்று முதல் மீண்டும் குப்பையில் தீப்பற்றி எரிகிறது. கிளம்பும் புகையால் அப்பகுதியில் மீண்டும் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
