/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னைக்கு மாற்றம்
/
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னைக்கு மாற்றம்
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னைக்கு மாற்றம்
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னைக்கு மாற்றம்
ADDED : செப் 25, 2025 03:20 AM
மதுரை : தமிழக மின்வாரியத்திற்கு மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை கோரியும் தாக்கலான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டி ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக மின்வாரியத்திற்கு 2021 முதல் 2023 வரை 26 ஆயிரத்து 300 மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்கள்) ரூ.1068 கோடியில் கொள்முதல் செய்ய 7 முறை டெண்டர் நடந்தது. இக்காலகட்டத்தில் பிற மாநிலங்களும் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தன. அவற்றின் விலைகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிக விலைக்கு கொள்முதல் நடந்துள்ளது. ஊழல் மூலம் அரசுக்கு ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்மாற்றிகளை வினியோகம் செய்தவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை இல்லை.
சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
அரசு தலைமை வழக்கறிஞர் ராமன்: இதுபோன்ற ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனி நீதிபதி விசாரிக்கிறார். எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. அந்த அமர்வில்தான் இவ்வழக்கை விசாரிக்க முடியும் என்றார். நீதிபதிகள்,'இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்விற்கு மாற்றப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.