/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயிலில் படப்பிடிப்புக்கு எதிராக வழக்கு
/
கோயிலில் படப்பிடிப்புக்கு எதிராக வழக்கு
ADDED : ஜூலை 24, 2025 05:38 AM
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயிலில் 'வேட்டுவம்' சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயில் பழமையானது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இதன் வளாகத்தில் 'நீலம் ஸ்டுடியோ' சினிமா தயாரிப்பு குழுவினர் அனுமதி பெறாமல் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை 'வேட்டுவம்'படப்பிடிப்பு நடத்தினர்.
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தினர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு,'உரிய அனுமதியுடன் படப்பிடிப்பு நடந்தது,' என தெரிவித்தது.
நீதிபதி,'அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.