/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழநி மலை மீது மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் அச்சுறுத்தல் தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல்
/
பழநி மலை மீது மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் அச்சுறுத்தல் தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல்
பழநி மலை மீது மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் அச்சுறுத்தல் தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல்
பழநி மலை மீது மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் அச்சுறுத்தல் தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல்
ADDED : நவ 07, 2025 05:54 AM
மதுரை, நவ. 7 -
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை மீது மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களால் மலை மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால் தடை விதிக்க கோரி தாக்கலான வழக்கில் சுற்றுலாத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பழநியைச் சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
சிவகிரி என்ற பழநி மலை உச்சியில் அறுபடை வீடுகளுள் ஒன்றான முருகன் கோயில் அமைந்துள்ளது. இதில் உள்ள முருகன் சிலை நவபாஷாணம் கொண்டு 18 சித்தர்களில் ஒருவரான போகரால் உருவாக்கப்பட்டது.
கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள், யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலையேறுகின்றனர். வயதானவர்கள், வி.ஐ.பி.,களுக்காக 50 ஆண்டுகளுக்கு முன் மலை மீது 3 தண்டவாளங்கள் அமைத்து விஞ்ச் போக்குவரத்தும், ஒரு ரோப் கார் போக்குவரத்தும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
தற்போது ஹிந்து அறிநிலையத்துறை சார்பில் ரூ.254 கோடியில் கூடுதலாக ரோப் கார், விஞ்ச் சேவை உட்பட பல்வேறு கட்டுமானங்கள் மலைமீது மேற்கொள்ளப்படுகின்றன.
மென்பாறைகளால் ஆன மலையின் செங்குத்தான, உணர்திறன் வாய்ந்த சரிவுகளில் மேலும் கட்டுமானங்கள் கட்டுவது பாதுகாப்பற்றது.
புவி தொழில்நுட்ப விசாரணையோ, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடோ நடத்தப்படாமல் அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் இத்தகைய கட்டுமானங்கள் கட்ட முற்பட்டால் மண் உறுதித்தன்மை இழப்பு, பாறை சரிவுகள், நிலச்சரிவுகள் ஏற்பட்டு மலை பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் பக்தர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய கட்டுமானங்களால் கோயில் நிதி வீணடிக்கப்படுகிறது. கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜரானார்.
சுற்றுலாத்துறை முதன்மை செயலர், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை கமிஷனர், கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச., 3க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

